சென்னை மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 2ஆம் தேதி) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதால், விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வங்கல் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று காலை  5 மணி அளவில் சென்னைக்கு  தென்கிழக்கில் சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.  இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து  நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.


பின்னர் 3 ஆம் தேதி வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் வட தமிழகத்தை நோக்கி வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஆந்திரா- மசூலிப்பட்டிணம் பகுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  முன்னதாக, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டே இருந்தது. ஏராளமான இடங்களில் மழை காரணமாக தண்ணீர் தேங்கியது. சென்னையில் 3 பேர் மழை நீரில் மின்சாரம் தாக்கி, பலியாகினர். 


இந்த நிலையில் தொடர்ச்சியான மழைப்பொழிவு காரணமாக நேற்று (நவம்பர் 30) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதை ஈடுகட்டும் வகையில் நாளை (டிசம்பர் 2) சனிக்கிழமை அன்று பள்ளிகள், வேலை நாளாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  


நாளை பள்ளிகளுக்கு விடுமுறை


எனினும் சென்னை மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 2ஆம் தேதி) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதால், விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு ஒத்திவைப்பு


முன்னதாக அரையாண்டுத் தேர்வுக்கு முன்னதாக நடைபெறுவதாக இருந்த ஒரு மதிப்பெண் தேர்வு, மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


வானிலை முன்னெச்சரிக்கை என்னென்ன?


அடுத்த வரும் நான்கு தினங்களைப் பொறுத்த வரையில் வட தமிழகத்தில் இருக்கும் மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.


கனமழையைப் பொறுத்த வரையில் டிசம்பர் 1, 2  தேதிகளில் டெல்டா ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். டிசம்பர் 3ஆம்  தேதி திருவள்ளூர், சென்னை தொடங்கி கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.