நிலுவையில் உள்ள பல்வேறு மசோக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என,  தமிழ்நாடு அரசு சார்பில் தொடப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


வழக்கு விசாரணை:


இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மனுவை விசாரித்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டாக்டர்.அபிஷேக் மனு சிங்வி, இந்த விவகாரத்தில் புதிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறினார். நவம்பர் 28 அன்று, ஆளுநர் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். இது அரசியலமைப்பிற்கு எதிரானது” என்றார்.


நீதிபதிகள் கேள்வி:


அப்போது, “ஆளுநருக்கு, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, அனுமதியை நிறுத்துவது அல்லது மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஒதுக்குவது ஆகிய மூன்று வழிகள் உள்ளன. ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சட்டசபை மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றினால், அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது. ஆளுநர் ஆரம்பத்தில் நான் ஒப்புதலை நிறுத்துகிறேன் என்று கூறி, ஒருமுறை ஒப்புதலைத் தடுத்து நிறுத்துவிட்டால் பின்னர் அவர் அதை குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்க முடியாது. ஆளுநரின் அலுவலகம் போலல்லாமல், ஒரு குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியை வகிக்கிறார். எனவே குடியரசுத் தலைவருக்கு மிகவும் பரந்த அதிகாரம் வழங்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசின் நியமனமாக இருக்கும் ஆளுநர், 200வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள மூன்று விருப்பங்களில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். வேறு வாய்ப்புகள் இல்லை. சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் அளுநரே தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். தமிழ்நாடு ஆளுநருக்கும், முதலமைச்சருருக்கும் இடையே தீர்க்கப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆளுநர் முதலமைச்சருடன் அமர்ந்து இதைத் தீர்த்தால் நாங்கள் பாராட்டுவோம். ஆளுநர் முதலமைச்சரை அழைத்து பேசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினர். தொடர்ந்து வழக்கு விசாரணயை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


வழக்கு விவரம்:


இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அந்தமனு விசாரணைக்கு வந்த போது, மசோதாக்கள் மீது ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, நவம்பர் 13 ஆம் தேதி பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பதாக ஆளுநர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழக  அரசு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அதே மசோதாக்களை நவம்பர் 18-ஆம் தேதி மீண்டும் நிறைவேற்றியது.  இதையடுத்து, கடந்த நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மசோதாக்கள் நிலுவையில் இருப்பது குறித்து ஆளுநரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில் தான், மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்க, அதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.