சென்னையில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மற்ற பாடப்பிரிவுகள் எல்லாம் வேகமாக நிரம்பிவரும் சூழலில் கணிதப் பாடப் பிரிவை எடுக்கும் மாணவர்கள் குறைந்துவருகிறார்கள். முன்னணி கல்லூரிகள் பலவும் பிஎஸ்சி கணிதப் பாடத்தில் மாணவர்கள் சேர காத்திருக்கின்றன. 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலைமை முற்றிலுமாக வேறாக இருந்தது. லயோலா கல்லூரியில் கணிதப் பாடப்பிரிவுக்கு மட்டுமே அதிக டிமாண்ட் இருந்த காரணத்தால் 2வது ஷிஃப்ட் ஒன்றும் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு லயோலா கல்லூரியில் கணிதப் பாடப்பிரிவில் வெறும் 70 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இரண்டாவது ஷிஃப்ட் மொத்தமாக காலியாக இருக்கிறது. அதேபோல் வேதியியல், இயற்பியல் பாடப் பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருக்கின்றன.
அண்மைக்காலமாக மாணவர்கள் கணினி சார் கல்வி மற்றும் வணிகவியல் சார்ந்த படிப்புகளிலும் அதிக ஆர்வம் காட்டுவதாலேயே இவ்வாறாக கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கிறது எனக் கல்லூரி முதல்வர் தாமஸ் அமிர்தம் கூறியிருக்கிறார்.
ஒட்டுமொத்தமாகவே கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 10 முதல் 15 சதவீதம் குறைவு. கணிதப் பாடப் பிரிவில் மாணவர்களை நிரப்ப இதுவரை இப்படியொரு சிக்கலை சந்தித்ததே இல்லை எனக் கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. இந்த மாற்றம் குறித்து ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் ஏ.சுதாகர் கூறுகையில், இந்த ஆண்டு நிகழும் பாடப்பிரிவு தேர்விலான மாற்றத்தை 12-ஆம் வகுப்பில் அறிவிக்கப்பட்ட 100 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே வெற்றி பெற்றுள்ள நிலையில் பெரும்பாலானோர் தொழில்முறைப் பாடப்பிரிவுகளில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர். இல்லாவிட்டால் கணினி அறிவியல் அவர்களின் தேர்வாக இருக்கிறது என்றார்.
சென்னை குருநானக் கல்லூரி முதல்வர் எம்.ஜி.ரகுநாதன் இது குறித்து கூறும்போது, ”இது நிச்சயமாக அசாதாரண சூழல். எல்லா பாடப் பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில் கணிதப் பாடத்தில் மட்டுமே ஏன் மாணவர்கள் சேர விரும்பவில்லை எனத் தெரியவில்லை. எங்கள் கல்லூரிகளில் கணிதப் பாடத்தில் உள்ள 50 இடங்களில் 10 இடங்களில் இன்னும் மாணவர்கள் சேரவில்லை.
ஆனால், சென்னை எம்ஓபி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணனோ நிலைமை தற்காலிகமானது எனக் கூறுகிறார். இப்போது நீட் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் பலரும் தேர்வு முடிவு வெளியான பின்னர், கணிதப் பாடத்தைத் தேடி வருவார்கள் எனக் கூறுகிறார். எம்ஓபி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரியில் இளங்கலை கணிதப் பாடப்பிரிவில் மொத்தமுள்ள 70 இடங்களில் 15 இடங்கள் காலியாக இருக்கிறது. அவை அனைத்துமே நீட் தேர்வு முடிவான பின்னர் நிரம்பிவிடும் என்றார்.
அக்டோபர் 6 ஆம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. நீட் தேர்வில் நல்ல ரேங்க் கிடைக்காதவர்களும், பொறியல் கல்லூரியில் இடம் கிடைக்காதவர்களும் கணிதப் பாடத்தைத் தேர்வு செய்வார்கள் என்றார். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், கணிதப் பாடத்துக்கான ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைவது கவலையளிக்கிறது. செயற்கை நுண்ணறிவுக்கு தேவையான அல்காரிதம்களை கணித அறிவு இல்லாமல் எப்படி மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள்” என்று கேள்வி எழுப்புகிறார்.