செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர், மாற்றுத்திறனாளியான இவர் செங்கல்பட்டு  மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்து உள்ள கூடப்பாக்கம் என்ற கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் தலைமை ஆசிரியரான ஸ்ரீதர் தனது  பள்ளி மாணவ, மாணவிகளிடம் நண்பராக பழகி கல்வி கற்பித்தலை மாணவர்களுக்கு எப்படி எளிதாக புரிய வைக்க முடியும் என்ற வகையில் பாடம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




 

இந்நிலையில் இன்று தமிழக முன்னாள் முதலமைச்சரும், கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு  கூடப்பாக்கம் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகள் உடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்தும், அரசு பள்ளி மாணவ மாணவிகள் பலருக்கு பல விதமான நலத்திட்ட உதவிகளை காமராஜர் செய்திருந்தார் என்பதை குறிப்பிட்டு பள்ளி மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்து சிறப்புரையாற்றி பேசினார்.

 



 

இதனையடுத்து காமராஜர் பிறந்த நாளான இன்று முதல் தான் பள்ளி சீருடைகளை அணிந்துக் கொண்டு தான் பள்ளிக்கு வருவேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். பள்ளி சீருடையில்  பள்ளி ஆசிரியரும் வரும்பொழுது பள்ளி மாணவர்களிடையே அவர் எளிதில் பழகக் கூடிய வாய்ப்பும், பள்ளி மாணவ மாணவிகளின் குறைகளை கேட்டு அறிந்து அவர்களுக்கு எளிதில் புரியும் படி பாடத்தை கற்பிக்க முடியும் என்பதினாலே, இந்த முடிவை தான் எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளியான தலைமை ஆசிரியரின் இந்த செயல் பெற்றோர்கள் மற்றும் அந்த கிராம பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.