2024ஆம் ஆண்டு முதல் பட்டயக் கணக்கியல் (Chartered Accountant) தேர்வுகள் மூன்று முறை நடத்தப்படும் என்று இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வு ளை ஜனவரி, மே/ ஜூன் மற்றும் செப்டம்பர் என 3 முறை நடத்தப்பட உள்ளது. 


இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக ஆசைப்படுவோர், ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது  கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.


இந்தத் தகுதித் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் நடக்கும். பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதல்நிலைத் தேர்வை எழுதத் தேவையில்லை. இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. அதே நேரத்தில், ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள் ஆவர்.


தேர்வு முறையில் மாற்றம்


இந்த நிலையில் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புது டெல்லியில் நடைபெற்ற பட்டயக் கணக்காளர்கள் கழகத்தின் 430ஆவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக ஜனவரி, மே / ஜூன் மாதங்களில் என ஆண்டுக்கு 2 முறை சிஏ தேர்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கூடுதலாக ஒரு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  முதல்நிலை, இடைநிலைத் தேர்வுகள் 3 முறை நடைபெற உள்ளன. 


இதுகுறித்து இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கழகம் வெளியிட்டுள்ள் அறிவிப்பில், ’’ஆண்டுக்கு 3 முறை ஜனவரி, மே / ஜூன், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தேர்வு நடைபெற உள்ளது.


உலக அளவில் தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பை வழங்கும் வகையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  






2024ஆம் ஆண்டு மே / ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள தேர்வுக்கு, 4,36,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.