பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 அளவுக்கு அளிக்கக்கூடிய வகையில், மத்திய அரசு பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அவை என்ன என்று பார்க்கலாம். 


நாடு முழுவதும் சிறுபான்மை இனத்தவருக்கு அரசு சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சிறுபான்மையின மாணவர்களுக்கு, ப்ரீ மெட்ரிக் உதவித் தொகை  (Pre Matric Scholarships Scheme for Minorities), போஸ்ட் மெட்ரிக் சிறுபான்மையின உதவித் தொகை, தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான உதவித்தொகை (Merit Cum Means Scholarship For Professional and Technical Courses) மற்றும் பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய கல்வி உதவித்தொகை (BEGUM HAZRAT MAHAL NATIONAL SCHOLARSHIP) ஆகியவை வழங்கப்படுகின்றன. 


இந்த நிலையில் இந்த உதவித்தொகைகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்.


கல்வித் தகுதியில் சிறந்து விளங்கும் சிறுபான்மையின மாணவர்கள் படிப்பதை ஊக்குவிக்க இந்த உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் படிக்கும் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், ஜெயின்கள், பார்சிக்கள், பவுத்தர்கள் மற்றும் சீக்கிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


18 வயது பூர்த்தி அடைந்த மாணவர்கள் https://scholarships.gov.in/ என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 18 வயதுக்குக் குறைவான மாணவர்கள், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 


பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது. மொத்தம் 5 லட்சம் பேருக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு சிறுபான்மை இனத்திலும் தலா 30 சதவீதம் மாணவிகளுக்கு அளிக்கப்படுகிறது. தகுதிவாய்ந்த மாணவிகள் 30 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தால், கூடுதலாக அவர்களுக்கும் வழங்கப்படும். 


குறிப்பிட்ட சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான உதவித் தொகை முழுமையாக வழங்கப்படாத பட்சத்தில், அதே சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பிற மாநில மாணவர்களுக்கு அந்த உதவித்தொகை வழங்கப்படும். 


ஒரு மாணவரின் வசிப்பிடம் எந்த மாநிலத்தில் உள்ளதோ, அந்த மாநிலத்தைச் சார்ந்தே உதவித்தொகை வழங்கப்படும். 




பொதுவாக என்னென்ன ஆவணங்கள் அவசியம்?


* மாணவர் புகைப்படம்.
* கல்வி நிறுவனத்தின் சரிபார்ப்புப் படிவம்.
* தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட வருமானச் சான்றிதழ்
*  18 வயதை அடைந்த மாணவர்களிடம் இருந்து சுய சான்றளிக்கப்பட்ட சாதிச் சான்றிதழ், 18 வயதுக்குக் கீழான மாணவர்களுக்கு பெற்றோர்/ பாதுகாவலரால் சான்றளிக்கப்பட்ட சாதிச் சான்றிதழ்
*  மதிப்பெண்  சான்றிதழ்
*  'தற்போதைய பாட ஆண்டுக்கான' கட்டண ரசீது.
*  மாணவர்களின் வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு
*  வங்கிக் கணக்கு எண் விவரங்கள் (சொந்த வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, பெற்றோர்/ பாதுகாவலர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள்).
*  குடியிருப்புச் சான்றிதழ்.
*  மாணவரின் ஆதார் எண். ஆதார் இல்லை என்றால் பள்ளி/ கல்லூரி நிறுவனத்தில் இருந்து பெறப்படும் சான்றிதழ் மற்றும் ஆதார் பதிவு ஐடி (ஆதாருக்கு விண்ணப்பித்தால்).


போஸ்ட் மெட்ரிக் சிறுபான்மையின உதவித் தொகை தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/MoMA_Post_Matric_2018-20.pdf


ப்ரீ மெட்ரிக் சிறுபான்மையின உதவித் தொகை தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/MoMA_Pre_Matric_2018-20.pdf 


தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான உதவித் தொகை தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/MoMA_MCM_2018-20.pdf


பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய கல்வி உதவித்தொகை தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/1053_G.pdf


மேலும் விவரங்களை அறிய: https://scholarships.gov.in/