நீட் முறைகேடு விவகாரத்தை தொடர்ந்து தேசிய தேர்வு முகமை தலைவர் பதவியில் இருந்து சுபோத்குமார் சிங் நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வாக “நீட்” அமலில் உள்ளது. இந்த தேர்வானது மிகுந்த கெடுபிடிகளுக்கு மத்தியில் தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 4 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றனர். சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பியது. முதலில் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை தேசிய தேர்வு முகமை மறுத்தது. ஆனால் இதுதொடர்பான விசாரணையில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்டார். இதற்கிடையில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு நடைபெறுகிறது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் உதவி பேராசியர்கள் பணிக்காக நடைபெற்ற நெட் தேர்விலும் வெளிப்படை தன்மை இல்லை என தகவல் வந்ததால் அந்த தேர்வும் ரத்து செய்வதாக தேசிய கல்வி அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்வு முறைகேடு தொடர்பான சட்டமும் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
நெட் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய தேர்வு முகமையின் தலைவர் பொறுப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முறைகேடு புகார்களை தொடர்ந்து தலைவராக செயல்பட்டு வந்த சுபோத்குமார் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக உள்ள பிரதீப் சிங் கரோலாவுக்கு தேசிய தேர்வு முகமையின் தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சுபோத்குமார் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், முதுநிலை நீட் தேர்வின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்வதற்காக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.