என்ஐஆர்எஃப் தரவரிசை 2025-ன்படி தொடர்ச்சியாக 10-வது ஆண்டாக ‘பொறியியல்’ பிரிவிலும், தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக ஒட்டுமொத்த’ பிரிவிலும் இக்கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பெற்று, இந்திய கல்வித்துறையில் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐஐடி சென்னை, இந்திய அரசின் கல்வி அமைச்சக தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பில் (National Institutional Rankings Framework (NIRF) முதலிடத்தைத் தக்கவைத்து, பொறியியல் கல்வியில் பத்தாண்டுகால சிறப்பைக் கொண்டாடுகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்திய கல்வித் துறையிலேயே முன்னிலை
இந்திய கல்வி முறையில் முன்னுதாரணமாகத் திகழ்ந்து சாதனை படைக்கும் விதமாக, என்ஐஆர்எஃப் 2025-ல் தொடர்ச்சியாக 10-வது ஆண்டாக ‘பொறியியல்’பிரிவிலும், தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக ‘ஒட்டுமொத்த’ பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்து, இந்திய கல்வித் துறையில் முன்னிலை வகிக்கும் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
என்ஐஆர்எஃப் தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் பிரிவில் ஐஐடி சென்னை நம்பர்-1 இடத்தையே பிடித்துள்ளது.
கண்டுபிடிப்புகள் பிரிவிலும் முதலிடம்
கண்டுபிடிப்புகள் பிரிவில் (முன்னர் அடல் நிறுவனங்களின் புத்தாக்க சாதனைகள் தரவரிசை என்று அழைக்கப்பட்டது) இக்கல்வி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது, கடந்த ஆண்டு இதே பிரிவில் 2-வது இடத்தைப் பிடித்தது.
சமீபத்தில், உலகத் தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும், ஆழமான தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களை நிறுவவும், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுப் பள்ளியை ஐஐடி கல்வி நிறுவனம் தொடங்கியுள்ளது. தொழில்முனைவோருக்கான பல்கலைக்கழகங்களின் உலகளாவிய வரைபடத்தில் இக்கல்வி நிறுவனத்தை இடம்பெறச் செய்வதே இதன் நோக்கமாகும்.
‘ஆராய்ச்சி நிறுவனங்கள்’ பிரிவில், ஐஐடி மெட்ராஸ் கடந்தாண்டு 2-வது இடத்தைப் பிடித்து, பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் இருந்தது. குறிப்பாக, இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘நிலைத்தன்மைக்கான மேம்பாட்டு இலக்குகள்’ (Sustainability Development Goals - SDG) பிரிவில் ஐஐடி மெட்ராஸ் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தத் துறையில் செய்யப்பட வேண்டிய முன்மாதிரிப் பணிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், நிலைத்தன்மைக்கான பள்ளியை இக்கல்வி நிறுவனம் அக்டோபர் 2023-ல் தொடங்கியது.
ஐஐடி மெட்ராஸ் தனது வரலாற்றில் முதன்முறையாக, 2024-25 நிதியாண்டில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்களுக்கு தொழில் ஊக்குவிப்பு செய்தது. 2024- 25-ம் ஆண்டில் 417 காப்புரிமைகளுக்கு விண்ணப்பத்தை அளித்திருந்தது. இது ஐஐடி-எம் இயக்குநரின் நாளொன்றுக்கு ஒரு காப்புரிமை என்ற தொலைநோக்கு இலக்கை விட அதிகமாகும்.
சர்வதேச தரவரிசையிலும் இந்த ஆண்டு ஐஐடி மெட்ராஸ் தனது நிலையை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. QS உலக பல்கலைக்கழக தரவரிசை (QS WUR) 2026-ல், கடந்தாண்டு 227-வது இடத்தில் இருந்த ஐஐடிஎம் இந்தாண்டு 180-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.