சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளில் 2023- 24-ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகள் சிபிஎஸ்இ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. 


சுமார் 55 நாட்களுக்கு நடைபெறும் பொதுத் தேர்வுகள், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெறலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ  தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறும்போது, வேறு ஏதேனும் தேர்வுகளை நடத்தும் அனைத்து முகமைகளும் மேற்குறிப்பிட்ட தேர்வு அட்டவணையைக் கருத்தில்கொண்டு, தங்களின் தேர்வுகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். 


தேர்வு அட்டவணை குறித்த பட்டியல், ஏஐசிடிஇ, இந்தியத் தேர்தல் ஆணையம், தேசியத் தேர்வுகள் முகமை, யூபிஎஸ்சி, பல்கலைக்கழக மானியக் குழு, எஸ்எஸ்சி உள்ளிட்ட பல்வேறு தேர்வு முகமைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 


கடந்த ஆண்டு  12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி முடிந்தன. அதேபோல 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தன. 


38 லட்சம் பேர் எழுதிய தேர்வு


இரண்டு பொதுத் தேர்வுகளையும் சுமார் 38 லட்சம் மாணவர்கள் எழுதினர். 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 21 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதிய நிலையில், 12ஆம் வகுப்புத் தேர்வை 16 லட்சத்துக்கும் மாணவர்கள் எழுதி இருந்தனர்.


பிளஸ் 2 சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் மே 11ஆம் தேதி வெளியாகின. இதில் மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் குறைந்து 87.33 ஆக இருந்தது. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளில் முதல் இடத்தைக் கேரளா பெற்றது. திருவனந்தபுர மண்டல மாணவர்கள் 99.91 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இரண்டாவது இடத்தில், பெங்களூரு மண்டலத்தில் 98.64 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். சென்னை மண்டலம் 97.4 சதவீத தேர்ச்சியோடு 3ஆவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


தமிழக மாணவர்களுக்கு எப்போது?


தமிழக மாநில பாடத்திட்டத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஆண்டு மார்ச் 18ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.


கூடுதல் விவரங்களுக்கு: https://www.cbse.gov.in/cbsenew/documents//Board_Exam_schedule_2023_24_14072023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


இதையும் வாசிக்கலாம்: CUET Result 2023: அம்மாடியோவ்... 22 ஆயிரம் பேர் நூற்றுக்கு நூறு- க்யூட் தேர்வு முடிவுகளில் சுவாரசியம்!


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.