CBSE Single Girl Child Scholarship 2024: சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், ஒற்றைப் பெண் குழந்தைக்கான கல்வித் தொகையை அறிவித்துள்ளது. மாணவர்கள், புதிய விண்ணப்பத்துக்கோ, பழைய விண்ணப்பங்களை புதுப்பிக்கவோ செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 23 கடைசித் தேதி ஆகும்.
என்ன தகுதி?
* 2024ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ வாரியத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்து, தற்போது சிபிஎஸ்இ பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.
* குடும்பத்தில் ஒரே பெண் குழந்தையாக இருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்க விரும்பும் மாணவிகள் 10ஆம் வகுப்பில், 60 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது கல்வியில் சிறந்து விளங்கும் மாணவிகள் இந்த உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.
கல்விக் கட்டணம் முக்கியம்
* ஒரு கல்வி ஆண்டில் மாதம் ரூ.1500-க்கு மிகாமல், பள்ளியின் கல்விக் கட்டணம் (ட்யூஷன் ஃபீஸ்) இருக்க வேண்டும்.
* இந்தியர்கள் மட்டுமே இந்த உதவித் தொகைக்குத் தகுதியானவர்கள்.
* என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான கல்விக் கட்டணம் மாதத்துக்கு ரூ.6,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒற்றைப் பெண் குழந்தைகள், ஓராண்டு கல்வி உதவித் தொகை பெறலாம். அடுத்த ஆண்டு மீண்டும் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். எனினும் 11ஆம் வகுப்பில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியது முக்கியம்.
மாதாமாதம் உதவித் தொகை
இதன்கீழ் மாதாமாதம் 500 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும். மொத்தம் 2 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும்.
மாணவர்கள் நவம்பர் 22 முதல் புதிய விண்ணப்பத்துக்கோ, பழைய விண்ணப்பங்களை புதுப்பிக்கவோ செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 23 கடைசித் தேதி ஆகும்.
முழு விவரங்களை அறிய: https://www.cbse.gov.in/cbsenew/scholar/Public_Notice_SGC_2024_ENG_HINDI_22112024.pdf
கூடுதல் விவரங்களுக்கு: https://www.cbse.gov.in/