புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் திட்டத்தை சிபிஎஸ்இ அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு சிபிஎஸ்இ மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கான சாத்தியக் கூறுகளை மட்டுமே ஆராய உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  


சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் நாடு முழுவதும் 29,009 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 2.6 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேசியக் கல்விக் கொள்கையின் அம்சங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்தே தேர்வு எழுதும் முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியானது. தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் (National Curriculum Framework) பரிந்துரைப்படி இந்த யோசனை முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.


முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு இந்த வகையில் தேர்வு நடத்தப்படும் என்றும் 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கு திறந்த புத்தகம் முறையில் தேர்வு (CBSE Open Book Exams) நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது.


சோதனை முறையில் அறிமுகம்


முதல் கட்டமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தத் திட்டம் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஜூன் மாதம் இந்தத் திட்டம், முழுமையாக அறிமுகம் செய்யப்படும். முன்னதாக கொரோனா காலத்தில் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறையை அறிமுகம் செய்த டெல்லி பல்கலைக்கழகத்திடம் இருந்து தேவையான அறிவுரை பெறப்படும் என்றும் கூறப்பட்டது.


இந்த நிலையில் புத்தகத்தைப் பார்த்து தேர்வை எழுதும் திட்டம் எதுவும் இல்லை என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. இந்திய சூழலுக்கு இந்த முறை ஒத்து வருமா இல்லையா என்று சாத்தியக் கூறுகளை மட்டுமே ஆய்வு செய்ய உள்ளதாகவும், தேர்வின் நன்மைகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசிய சிபிஎஸ்இ அகாடமிக்ஸ் இயக்குநர் ஜோசப் இம்மானுவேல், ’’தேசிய கல்விக் கொள்கை மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு ஆகியவற்றின் பரிந்துரைகள் அடிப்படையில் மதிப்பீட்டில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர உள்ளது. இதற்காக புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதுவதில் உள்ள சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இது சில ஊடகங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது.


இந்த ஆய்வு ஒருசில தேர்வு செய்யப்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும் மேற்கொள்ளப்படும்’’ என்று இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.


அது என்ன புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் முறை?


புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறை பொதுவாக மேலை நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் உயர் கல்வியில் இந்த முறை அமலில் உள்ளது. எனினும் ’’இந்தியா போன்ற பெரிய நாட்டில், பல்வேறு பின்னணியில் இருந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கு புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முஐயை அறிமுகம் செய்யும் முன்னால் ஏராளமான முன் தயாரிப்பு தேவை’’ என்றும் சிபிஎஸ்இ அகாடமிக்ஸ் இயக்குநர் ஜோசப் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.