சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், வரவிருக்கும் 2026-27 கல்வியாண்டுக்கான புதிய பாடத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக இந்த பாடத்திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சிபிஎஸ்இ-ன் கல்வி சார்ந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக கல்வியாண்டு தொடங்கும்போது வெளியிடப்படும் பாடத்திட்டம், இம்முறை பள்ளி நிர்வாகங்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் முன்கூட்டியே தங்களது கற்றல் செயல்முறையைத் திட்டமிட வசதியாக முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள் என்னென்ன?
தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், மாணவர்களின் மனப்பாடம் செய்யும் முறையை மாற்றி, செய்முறை மற்றும் செயல்முறை கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொழிப் பாடங்கள், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்கள் மற்றும் விருப்பப் பாடங்களுக்கான (Electives) முழுமையான வரைமுறை இதில் இடம்பெற்றுள்ளது.
மேலும், உள்மதிப்பீட்டு மதிப்பெண்கள் (Internal Assessments) மற்றும் எழுத்துத் தேர்வுகளுக்கான மதிப்பெண் பகிர்வு குறித்த தெளிவான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி?
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதலில் cbseacademic.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
முகப்புப் பக்கத்தில் உள்ள 'Curriculum' என்ற பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும்.
அதில், 'Curriculum for the Academic Year 2026-27' என்பதை க்ளிக் செய்தால், 'Secondary' (9 மற்றும் 10-ம் வகுப்பு) மற்றும் 'Senior Secondary' (11 மற்றும் 12-ம் வகுப்பு) என இரண்டு பிரிவுகள் தோன்றும்.
இதில் தங்களுக்குத் தேவையான வகுப்பைத் தேர்ந்தெடுத்து, பாடவாரியான விவரங்களை பிடிஎஃப் (PDF) வடிவில் எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- அல்லது https://cbseacademic.nic.in/curriculum_2027.html என்ற இணைப்பை நேரடியாக க்ளிக் செய்தும் பாடத்திட்டத்தைப் பெறலாம்.
ஒவ்வொரு பாடத்திட்டத்திலும்
மொழிகள் ( Languages - (Group-L) )
முதன்மைப் பாடங்கள் - Main Subjects - (Group-A1)
பிற விருப்பப் பாடங்கள் - Other Academic Electives -(Group-A2)
உள் மதிப்பீட்டு பாடங்கள் - Subjects of Internal Assessment ஆகியவை இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் இப்போதிருந்தே தங்களது தயாரிப்புகளைத் தொடங்க இந்த அறிவிப்பு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
