பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒற்றைப் பெண் குழந்தைகள், மெரிட் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதற்கு அக்டோபர் 18 கடைசித் தேதி ஆகும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
2023ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ வாரியத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்து, தற்போது சிபிஎஸ்இ பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். குடும்பத்தில் ஒரே பெண் குழந்தையாக இருந்து, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவிகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். எனினும் 60 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அதேபோல ஒரு கல்வி ஆண்டில் மாதம் ரூ.1500-க்கு மிகாமல், பள்ளியின் கல்விக் கட்டணம் இருக்க வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான கல்விக் கட்டணம் மாதத்துக்கு ரூ.6,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒற்றைப் பெண் குழந்தைகள், ஓராண்டு கல்வி உதவித்தொகை பெறலாம். அடுத்த ஆண்டு மீண்டும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். எனினும் 11ஆம் வகுப்பில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியது முக்கியம்.
உதவித் தொகை எவ்வளவு?
இதன்கீழ் மாதாமாதம் 500 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும். மொத்தம் 2 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும்.
ஏற்கெனவே 2022ஆம் ஆண்டு விண்ணப்பித்து, உதவித்தொகை பெற்றவர்கள் புதுப்பிக்கவும் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் https://cbseit.in/cbse/2023/sgcx/default.aspx என்ற இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது குறித்த ஸ்டெப் - பை ஸ்டெப் விளக்கத்தைக் காண https://www.cbse.gov.in/cbsenew/scholar/How_fill_online_2023.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.
ஒற்றைப் பெண் குழந்தை கல்வி உதவித் தொகைக்கான விதிமுறைகள் குறித்து அறிய:
https://www.cbse.gov.in/cbsenew/scholar/SGC_Sship_Scheme_Guidelines_2023.pdf
கூடுதல் தகவல்களுக்கு: https://www.cbse.gov.in/cbsenew/scholar/Press_Note_Bilingual_2023.pdf
கல்வி ஒருவருக்கு இன்றியமையாத ஒன்று. அதன் முக்கியத்துவத்தை புரிந்து மத்திய, மாநில அரசுகள் கல்வியில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு அவர்களின் கல்வியை தொடர, பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், சில முக்கிய உதவித்தொகை திட்டங்கள் குறித்துக் காணலாம்.
இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தை உதவித்தொகை
இந்த இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித் திட்டமானது, வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தை பெற்றவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்தால் இது திட்டத்தின் கீழ் அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. வீட்டில் ஒரு பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் மேற்படிப்பு படிப்பதற்காக இந்த திட்டம் உதவி புரிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,200 பண உதவி வழங்கப்படுகிறது.
இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தை உதவித்தொகை திட்டத்தில் இணைவதற்கான தகுதியாக, வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தையாக இருந்து ,அவர் முதுகலை படிப்புகளை பயின்று கொண்டிருந்தால் இந்த நிதி உதவி அவர்களுக்கு வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டங்கள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரி மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக், உயர்தர கல்வி, தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டம், நேஷனல் ஃபெலோஷிப், இலவச பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.