நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதும்போது பழங்கள், இனிப்புகளுக்கு அனுமதி வழங்கி, சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.


சி.பி.எஸ்.சி. 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளன. 10 ,12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை என இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் பொதுத் தேர்வை எழுதும் வகை 1 நீரிழிவு நோயால் (Type-1 Diabetes) பாதிக்கப்பட்ட மாணவர்கள், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்வை எழுதும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் கூறி உள்ளதாவது:


மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்க்கும் வகையில் இந்த விதிகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மருத்துவப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்குத் தேர்வு நேரத்தின்போது பல்வேறு சலுகைகளை வாரியம் வழங்கி உள்ளது.


விதிமுறைகளின்படி, தேர்வு மையத்தில் என்னென்ன பொருட்களைக் கொண்டு செல்லலாம் என்று சிபிஎஸ்இ விளக்கியுள்ளது. அதில், கூறி உள்ளதாவது:


* சர்க்கரை மாத்திரைகள் / சாக்லேட்டுகள் / இனிப்புகள்


* வாழைப்பழம் / ஆப்பிள்/ ஆரஞ்ச் உள்ளிட்ட பழங்கள்


* சாண்ட்விச் உள்ளிட்ட தின்பண்டங்கள் மற்றும் உயர் புரோட்டீன் உணவுப் பொருட்கள்


* மருத்துவர் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள மருந்துகள்


* தண்ணீர் பாட்டில் (500 மி.லி.)


* குளுக்கோமீட்டர் மற்றும் குளுக்கோஸ் சோதனை ஸ்ட்ரிப்புகள்


* இன்சுலின் பம்ப்புகள்


மாணவர்கள் மேலே குறிப்பிட்ட வசதிகளைப் பெற என்ன செய்ய வேண்டும் என நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


* மாணவர்கள் முன்பதிவு செய்யும்போதே நீரிழிவு முதல் வகையால் (Type-1 Diabetes) பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற விவரத்தை அளிக்க வேண்டும்.


* தேர்வுக்குக் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு முன்னதாக, பள்ளியோ, மாணவரோ, பெற்றோரோ தேர்வு மையத்துக்கு வந்து, தலைமை கண்காணிப்பாளரிடம் மாணவர் கொண்டு வரும் பொருட்கள் குறித்த தகவலை அளிக்க வேண்டும்.


* தேர்வு நாளன்று தேர்வுக்கு 45 நிமிடங்கள் முன்னதாகவே, சம்பந்தப்பட்ட தேர்வர்கள் தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும். மாணவர்கள் காலை 9.30 மணிக்கே தேர்வு மையத்தை அடைய வேண்டும்.


இவ்வாறு சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 


தமிழக மாநில பாடத்திட்டத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஆண்டு மார்ச் 1ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26ஆம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.


கூடுதல் விவரங்களை அறிய: https://cbseacademic.nic.in/index.html- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


முழு தகவல்களுக்கு: https://www.cbse.gov.in