CBSE Compartment Exams 2024: சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 15ஆம் தேதி அன்று தொடங்கி, 22ஆம் தேதியில் முடிகின்றன.
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியாகின. இதில், 10ஆம் வகுப்பில் 93.6 சதவீத மாணவர்களும் 12ஆம் வகுப்பில் 87.98 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்றே அதிகமாக இருந்தது.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுக்குப் பிறகு, 1,32,337 மாணவர்கள் கம்பார்ட்மெண்ட் பிரிவில் வைக்கப்பட்டனர். அதேபோல 12ஆம் வகுப்பு மாணவர்கள் 1,22,170 பேர் கம்பார்ட்மெண்ட் பிரிவில் வைக்கப்பட்டனர். இவர்களுக்கான தேர்வுகள் ஜூலை மாதம் தொடங்குகின்றன. 10, 12ஆம் வகுப்புகளுக்குப் பெரும்பாலும் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும். சில தேர்வுகளுக்கு மட்டும் 10.30 முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.
பொதுத் தேர்வு அட்டவணையைக் காண்பது எப்படி?
* சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லவும். அதாவது https://www.cbse.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* முகப்புப் பக்கத்தில் உள்ள MAIN WEBSITE என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* அதில், Date Sheet for Supplementary Exam 2024 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* அதில் உள்ள, Class X (2.68 MB) என்ற இணைப்பை க்ளிக் செய்து, 10ஆம் வகுப்பு கம்பார்ட்மெண்ட் தேர்வுக்கான அட்டவணையைப் பெறலாம்.
* அதேபோல Class XII (2.95 MB) என்ற இணைப்பை க்ளிக் செய்து, 12ஆம் வகுப்பு கம்பார்ட்மெண்ட் தேர்வுக்கான அட்டவணையைப் பெறலாம்.
மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள துணைத் தேர்வுகள்
இதற்கிடையே மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 10ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பாடங்களில் துணைத் தேர்வை எழுதலாம். 12ஆம் வகுப்பு மாணவர்கள் 1 பாடத்தில் துணைத் தேர்வை எழுதலாம். அதேபோல தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களும் துணைத் தேர்வை எழுதலாம்.
முன்னதாக தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளின்படி, சிபிஎஸ்இ கம்பார்ட்மெண்ட் தேர்வுகளை ('Compartment' examination) துணைத் தேர்வுகள் ('Supplementary' examination) என்று பெயர் மாற்றம் செய்தது. பொதுத் தேர்வுகளிலும் துணைத் தேர்வுகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டமே பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு அட்டவணையைக் காண: https://www.cbse.gov.in/cbsenew/documents/Supplementary_Date_Sheet_Class_X_2024_07062024_Final_21062024.pdf
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு அட்டவணையைக் காண: https://www.cbse.gov.in/cbsenew/documents/Supplementary_Date_Sheet_Class_XII_2024_07062024_Final_21062024.pdf
தமிழ்நாட்டில் எப்படி?
முன்னதாக தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஜூலை 1 முதல் இவர்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. அதேபோல 10ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூலை 2ஆம் தேதி தொடங்குகின்றன. ஜூலை 8ஆம் தேதி வரை இவர்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.