ஜூன் 15-ஆம் தேதி சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழல் மற்றும் பல தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில், இந்தாண்டு 12-ஆம் வகுப்புக்கான வாரியத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், நன்கு வகுக்கப்பட்ட மதிப்பீடுகள் மூலம், நியாயமான முறையில் தேர்வு முடிவுகளை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்து பரிந்துரைக்க 13 நபர்கள் அடங்கிய குழுவை சிபிஎஸ்இ வாரியம் அமைத்தது. மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை செயலாளர் விபின் குமார், டெல்லி கல்வித்துறை இயக்குநர் உதித் பிரகாஷ் ராய், கேந்திரியா வித்யாலயா ஆணையர் நிதி பாண்டே, நவோதயா வித்யாலயா ஆணையர் வினாயக் கார்க், சண்டிகர் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருபிந்திரஜித் சிங் பிரார், சிபிஎஸ்இ இயக்குநர்(ஐடிபிரிவு ) அந்தி்க்ஸ் ஜோரி, சிபிஎஸ்இ இயக்குனர் ஜோஸப் இமானுவேல், யுஜிசி, என்சிஇஆர்டி அமைப்பிலிருந்து தலா ஒருவர், பள்ளிகள் தரப்பிலிருந்து இரு பிரதிநிதிகள் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதற்கிடையே, கடந்த வாரம் சிபிஎஸ்இ வாரிய செயலாளர் அனுராக் திரிபாதி, "12-ஆம் வகுப்பு தேர்வு மதிப்பீடு வழங்குவது தொடர்பான முறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை. தேர்வு முடிவுகள் வெளியிட இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும்" என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டைப்போல், சில மாணவர்கள் தேர்வு எழுத விரும்பினால், அதற்கான வசதியை, நிலைமை சீரடையும் போது சிபிஎஸ்இ வாரியம் வழங்கும் என்றும் தெரிவித்தார். கடந்த ஆண்டும் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 12-ஆம் வகுப்பின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 88.78 சதவிகிதமாக அதிகரித்திருந்தது. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட 5.38 சதம் கூடுதலாகும். மேலும், 90 சதவிகிதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை 13% ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டை விட 3.24% அதிகமாகும்.
இருப்பினும், கடந்தாண்டு சில பாடங்களுக்கு (குறைந்தது 3- 4 பாடங்கள்) தேர்வு நடத்தப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக இதர பாடங்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டன. எனவே, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளில் மாணவர்களின் செயல்பாடு மதிப்பீடு மூலம் சிபிஎஸ்இ மதிப்பெண் வழங்கியது. ஆனால், இந்தாண்டு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுவதற்கு முன்பாகவே, ரத்து செய்யப்பட்டது. எனவே, இந்தாண்டு நியாமான முறையில் மதிப்பீடு முறையை வகுப்பதில் கூடுதல் சிக்கல்கள் எழுந்துள்ளன.