சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (மே 13) வெளியான நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் தற்போது வெளியாகி உள்ளன. மாணவர்கள் https://testservices.nic.in/cbseresults/class_x_a_2024/ClassTenth_c_2024.htm என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் https://cbseresults.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள 3 இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம்.
93.6 சதவீதம் பேர் தேர்ச்சி
சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி, தேர்வு எழுதிய 22,38,827 மாணவ- மாணவிகளில் 20,95,467 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 93.60% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 2023 கல்வி ஆண்டு (93.12%) முடிவுகளுடன் ஒப்பிடும்போது 0.48% அதிகம் ஆகும்.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
* மாணவர்கள் இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்துகொள்ள வேண்டும்.
* அதில், பதிவு எண்ணை (Roll Number) உள்ளிட வேண்டும்.
* அடுத்ததாக, பள்ளி எண்ணை (School No.) உள்ளிட்ட வேண்டும்.
* தொடர்ந்து பிறந்த தேதி, அனுமதிச் சீட்டு எண் (Admit Card ID) ஆகியவற்றையும் உள்ளிட வேண்டும்.
இவ்வாறு செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம்.
சென்னையில் 99.30% தேர்ச்சி
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி, அகில இந்திய அளவில் திருவனந்தபுரம் 99.75% தேர்ச்சி விகிதத்தைப் பெற்று முதலிடத்தையும் , 99.60% பெற்று விஜயவாடா இரண்டாவது இடத்தையும் மற்றும் 99.30% தேர்ச்சியைப் பெற்று சென்னை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 12ஆம் வகுப்பிலும் திருவனந்தபுரம் முதலிடத்தைப் பிடித்த நிலையில், சென்னை 3ஆவது இடத்தைப் பெற்றது. 77.94 சதவீதத் தேர்ச்சியோடு, 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் குவாஹாட்டி கடைசி இடத்தில் உள்ளது.
தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 94.75% தேர்ச்சியும், மாணவர்கள் 92.71% தேர்ச்சியும் மூன்றாம் பாலினத்தவர் 91.30% தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
ஜவஹர் நவோதயா பள்ளிகள், 99.09 சதவீதத் தேர்ச்சி
2023ஆம் கல்வி ஆண்டைப்போல, 2024ம் ஆண்டு தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகள் 2.04% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி 86.72% ஆகவும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி 83.95% ஆகவும் உள்ளது. ஜவஹர் நவோதயா பள்ளிகள், 99.09 சதவீதத் தேர்ச்சியைப் பெற்று, முதல் இடத்தில் உள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் இதே தேர்ச்சி வீதத்தை பதிவு செய்துள்ளன. 90 சதவீதத்துக்கும் மேல் 9.49 சதவீத மாணவர்களும் 95 சதவீதத்துக்கும் மேல் 2.14 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.