சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே மாதத்தின் நடுவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி அன்று தொடங்கின. 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 13ம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதியும் முடிவடைந்தன. இந்த ஆண்டு 12.38 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.


கடந்த ஆண்டைப் பொறுத்தவரையில், 10ஆம் வகுப்புத் தேர்வை 20,16,779 மாணவ- மாணவிகள் எழுதினர். இதில்  93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 2023ஆம் ஆண்டு, 14,50174 மாணவர்கள் எழுதிய் நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் 90.68 ஆக இருந்தது. கடந்த ஆண்டு மே 12ஆம் தேதி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது.  


மே 6ஆம் தேதி வெளியாகும் தமிழகத் தேர்வு முடிவுகள் 


இந்த நிலையில், தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகின்றன. அதேபோல 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியாக உள்ளன.


இந்த நிலையில்,  சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது (CBSE Board exam result date 2024) என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மே மாதத்தின் நடுவில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?


மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், cbseresults.nic.in, results.cbse.nic.in மற்றும் cbse.gov.in என்ற இணைப்புகளை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளையும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களையும் அறிந்துகொள்ளலாம்.


எதில் காணலாம்?


மேலே குறிப்பிட்ட இணைய முகவரிகளில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்து, கீழ்க்காணும் வகைகளில் தேர்வு முடிவுகளை அறியலாம். 


* பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி மூலம்


* ஐவிஆர்எஸ் மூலம்


* டிஜிலாக்கர் மூலம்


* எஸ்எம்எஸ் செயலி


ஆகியவற்றின் மூலம் 2024ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12 பொதுத் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


கூடுதல் தகவல்களுக்கு: cbseresults.nic.in