சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், சென்னை பிராந்தியம் 98.47 சதவீதத் தேர்ச்சியோடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.


மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி அன்று தொடங்கின. ஏப்ரல் 2ம் தேதி முடிவடைந்தன. இந்த ஆண்டு  பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத 16.33 லட்சம் மாணவர்கள்,விண்ணப்பித்து இருந்தனர். இதில், 16.21 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இதில், 87.98 சதவீதம் பேர் குறிப்பாக, 14,26,420 பேர் தேர்ச்சி பெற்றனர்.


கடந்த ஆண்டு 87.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த முறை தேர்ச்சி வீதம் 0.65 அளவு உயர்ந்துள்ளது.


பிராந்திய வாரியான தேர்ச்சி விகிதம்


பிளஸ் 2 பொதுத் தேர்வில், திருவனந்தபுரம் பிராந்தியம் 99.91 சதவீதத் தேர்ச்சியோடு, முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடைசி இடத்தில் உள பிரயாக்ராஜ் (உ.பி.) 78.25 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது.


வழக்கம்போல மாணவிகளே இந்த ஆண்டும் அதிகமாக, 91.52 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள், 85.12 சதவீதம் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இது மாணவிகளைக் காட்டிலும் 6.40 சதவீதம் குறைவாகும்.


பள்ளிகள் வாரியாகத் தேர்ச்சி விகிதம்


பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் CTSA எனப்படும் மத்திய திபெத்திய பள்ளிகள் நிர்வாகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த வகைப் பள்ளிகள், 99.23 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. ஜவஹர் நவோதயா பள்ளிகள், 98.9 சதவீதத் தேர்ச்சியையும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், 98.81 சதவீதத் தேர்ச்சியையும் பெற்றுள்ளன.


தனிப்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள், 87.7சதவீதத்தைப் பெற்று, கடைசி இடத்தில் உள்ளன.


உடனடித் தேர்வுகள் எப்போது?


12-ம் வகுப்புக்கான கம்பார்ட்மென்ட் தேர்வுகள், வரும் ஜூலை 15-ம் தேதி முதல் நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. 


மாணவர்கள், cbse.nic.incbse.gov.incbseresults.nic.in, மற்றும் results.cbse.nic.in  Tஆகியவற்றில் தேர்வு முடிவுகளைக் காணலாம். அதேபோல, digilocker.gov.in மற்றும் results.gov.in தளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக மே 20ஆம் தேதிக்குப் பிறகே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல் வெளியான நிலையில், எந்த நேரத்திலும் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று சிபிஎஸ்இ அதிகாரி தகவல் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.