சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது.


சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ளன. இரண்டு தேர்வுகளுமே பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்க உள்ளன. 10ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், 12ஆம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


கையெழுத்து கட்டாயம்


மாணவர்கள் ஹால் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு, அதில் முதல்வரிடம் கையெழுத்து பெற வேண்டும். கையெழுத்து இடப்படாத ஹால் டிக்கெட்டுக்கு அனுமதி இல்லை. அத்தகைய ஹால் டிக்கெட்டை வைத்திருக்கும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கும் தனித் தேர்வர்களுக்கும் ஒரே நேரத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.


மாணவர்களின் மன நலன் கருதி இந்த ஆண்டு முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அறிவிக்கப்படாது என்று ஏற்கெனவே சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 


இந்த நிலையில் பொதுத் தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிந்துள்ளதாக ஃபேஸ்புக், எக்ஸ், டெலிகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவின. போலி வினாத்தாள் குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. வினாத்தாள் குறித்த போலி இணைப்புகளும் அதிகம் பகிரப்பட்டன.


ஐ.பி.சி. மற்றும் ஐ.டி. சட்டத்தின்கீழ் நடவடிக்கை


இதை அடுத்து, தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது. பணம் பறிக்கும் நோக்கிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்படும் தனி நபர்கள் / குழுக்கள்/ நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. குறிப்பாக ஐ.பி.சி. மற்றும் ஐ.டி. சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.






அதேபோல போலி செய்திகளைப் பகிரும் மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள வாரியம், இதுகுறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.


மாணவர்களின் மன நலன் கருதி இந்த ஆண்டு முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அறிவிக்கப்படாது என்று ஏற்கெனவே சிபிஎஸ்இ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 


முழு தகவல்களுக்கு: https://www.cbse.gov.in