முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் கேட் தேர்வு எனப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. 2022ஆம் ஆண்டுக்கான தேர்வில் 11 பேர் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 


தேர்வர்கள், https://iimcat.ac.in/ என்ற இணையதளத்துக்குச் சென்று தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். 


கேட் நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.எம்.கள் மற்றும் பிசினஸ் பள்ளிகளில் மேலாண்மைப் படிப்புகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது. குறிப்பாக அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கல்கத்தா, இந்தூர், ஜம்மு, காஷிபூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோஹ்டக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மவுர், திருச்சி, உதய்பூர், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் உள்ள ஐஐஎம்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 


என்ன தகுதி?


இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான சி.ஜி.பி.ஏ.வைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்கள் இட ஒதுக்கீட்டின்கீழ் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.


முன்னதாக முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் கேட் தேர்வுக்கு (2022) விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் செப்டம்பர் 14 ஆக இருந்த நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 




3 கட்டங்களாகத் தேர்வு


தேர்வர்கள் அனுமதிச் சீட்டை அக்டோபர் 27 முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்தனர். கேட் தேர்வு நவம்பர் 27ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 2.55 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 2.22 லட்சம் பேர் தேர்வெழுதினர். நாடு முழுவதும் 293 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 


பொது நுழைவுத் தேர்வு தேர்வு 3 கட்டங்களாக, தலா 2 மணி நேரத்துக்கு  நடைபெற்றது. குறிப்பாக காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை முதல்கட்டத் தேர்வும் 2ஆவது கட்டத் தேர்வு 12.30 முதல் 2.30 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெற்றது. 


இந்நிலையில் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. தேர்வர்கள், https://iimcat.ac.in/ என்ற இணையதளத்துக்குச் சென்று தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். கேட் தேர்வில் 11 பேர் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 


மதிப்பெண்களைத் தெரிந்துகொள்வது எப்படி?


* தேர்வர்கள் https://cdn.digialm.com/EForms/configuredHtml/756/77650/login.html என்ற இணைய பக்கத்தை க்ளிக் செய்யவும்.


* Login to Download Score Card  என்ற பக்கம் தோன்றும். 


* அதில், பதிவு முகவரி மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு, தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.