டி.என்.பி.எஸ்.சி தொகுதி இரண்டுக்கான முதன்மைத் தேர்வை நடத்துவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 


இதுகுறித்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:


’’தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தொகுதி இரண்டுக்கான முதன்மைத் தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது. பல தேர்வு மையங்களில் வினாத் தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இந்தக் குழப்பத்திற்கும் தாமதத்திற்கும் காரணமாகும். 


டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே காரணம்


பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத் தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் பல இடங்களில் வினாத்தாள் வெளியாகிவிட்டது. டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே இதற்குக் காரணம். 


போட்டித் தேர்வுகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு மன உளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய தேர்வில் சம வாய்ப்பும் இல்லை, மன உளைச்சல் இல்லாத சூழலும் ஏற்படுத்தப்படவில்லை. 


சம வாய்ப்பு அற்ற சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சம நீதி கிடைக்காது. எனவே இன்றைய தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்துவிட்டு, வேறு ஒருநாளில், அமைதியான சூழலில் இந்தத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி மீண்டும் நடத்த வேண்டும்’’.


இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.