2024-ம் ஆண்டுக்கான சி.ஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் (ICAI CA) பணிக்கான இடைநிலை (Intermediate) மற்றும் இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. ஐ.சி.ஏ.ஐ. (The Institute of Chartered Accountants of India -ICAI) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், வரலாற்றிலேயே இல்லாத வகையில் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
36.35 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
சிஏ இறுதி குரூப் 2 தேர்வில் 20,446 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஐ.சி.ஏ.ஐ. தெரிவித்துள்ளது. இதுதான் இதுவரை பெற்ற தேர்ச்சி விகிதத்திலேயே அதிகம் ஆகும். குறிப்பாக 36.35 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னதாக இதுவரை குறைந்தபட்சமாக சிஏ இடைநிலை குரூப் 2 தேர்வில் 18.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
2024-ம் ஆண்டிற்கான சி.ஏ. இடைநிலை குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றன. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.
இரு பிரிவிலும் 19.88 சதவீதம் தேர்ச்சி
சிஏ குரூப் 1 தேர்வில் தேர்ச்சி சதவீதம் 27.35 ஆக பதிவாகியுள்ளது. தேர்வெழுதிய 74,887 பேரில் கிட்டத்தட்ட 20,479 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குரூப் 2 தேர்வில், சுமார் 58,891 மாணவர்கள் எழுதினர். இதில், 21,408 பேர் தகுதி பெற்றுள்ளனர். குரூப் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் 36.35 ஆக பதிவாகியுள்ளது. இரு பிரிவிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 19.88 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு தேர்வுகளையும் மொத்தம் 35,819 பேர் தேர்வெழுதினர், அதில் 7,122 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.
இடைநிலை குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்ச்சி சதவீதம் 27.15 ஆகும். தேர்வெழுதிய 1,17,764 மாணவர்களில் 31,978 பேர் தகுதி பெற்றுள்ளனர். குரூப் 2 தேர்வை 71,145 பேர் எழுதியதில், 13,008 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். இதில் தேர்ச்சி சதவீதம் 18.28 ஆக பதிவாகியுள்ளது. 59,956 பேர் தேர்வெழுதிய நிலையில், 11,041 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களின் தேர்ச்சி சதவீதம் 18.42 ஆக பதிவாகியுள்ளது.
யார் யார் முதல் மதிப்பெண்கள்?
சிஏ இறுதித் தேர்வில் புதுதில்லியைச் சேர்ந்த சிவம் மிஸ்ரா 83.33 சதவீத மதிப்பெண்களுடன் முதல் இடம் பெற்றுள்ளார். இவர் 500 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த வர்ஷா அரோரா 80 சதவீத மதிப்பெண்களுடன் 480 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தை, மும்பையைச் சேர்ந்த கிரண் ராஜேந்திர சிங் மன்ரல் மற்றும் கில்மான் சலீம் அன்சாரி ஆகியோர் பெற்றுள்ளனர். இவர்கள் மொத்தம் 477 மதிப்பெண்களுடன் 79.50 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.icai.org/