சிஏ தேர்வுகள் ஜனவரி 14, 16 தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதை விமர்சித்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.


பட்டயக் கணக்காளர் பணிகளுக்காக நடத்தப்படும் சிஏ தேர்வுகள், பொங்கல் பண்டிகை இருக்கும் ஜனவரி 14, 16 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் தனித்துவம் மிக்க பண்பாட்டுத் திருவிழா அன்று, தேர்வு வைக்கப்படுவதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தேர்வை மாற்றி அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு


திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ் காந்தி, ''தமிழர் விரோத ஒன்றிய பாஜக அரசு!! தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகளை நடத்துகிறது ஒன்றிய அரசு!! தீபாவளி அன்று தேர்வு நடத்துவீர்களா??'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


அதேபோல திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் ஐசிஏஐ தேர்வு அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இருந்தனர்.


பாஜக அனைத்து மாநிலங்களுக்கும் எதிரானதா?


இந்த நிலையில் ராஜீவ் காந்தியின் பதிவைப் பகிர்ந்த பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, அதே பொங்கல் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. வடக்கில் லோரி, உ.பி.யில் கிச்டி, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணி, வட கிழக்கு மாநிலங்களில் பிஹு என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது. நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், பாஜக அனைத்து மாநிலங்களுக்கும் எதிரானதா?


இரண்டாவதாக சிஏ தேர்வுகளை பாஜக நடத்தவில்லை. தன்னாட்சி அமைப்பான ஐசிஏஐ நடத்துகிறது.


மூன்றாவதாக, புரொஃபஷனல்களால்தான் தொழில்முறைத் தேர்வுகளுக்கு ஏன் அவ்வாறு விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது தெரியும் என்று பதிவிட்டு இருந்தார்.


“தமிழ் விரோதி” பிரச்சாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது


இதைப் பகிர்ந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ’’சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா அவர்களே. எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் “தமிழ் விரோதி” பிரச்சாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும்’’ என்று காட்டமாகப் பதிவிட்டு உள்ளார்.