2024ஆம் ஆண்டு முதல் பட்டயக் கணக்கியல் (Chartered Accountant) தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டிப்பதாக, ஐசிஏஐ எனப்படும் இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக ஆசைப்படுவோர், ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.
இந்தத் தகுதித் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் நடக்கும். பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதல்நிலைத் தேர்வை எழுதத் தேவையில்லை. இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. அதே நேரத்தில், ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள் ஆவர்.
இந்த நிலையில், காப்பீடு மற்றும் ஆபத்து மேலாண்மை – (Insurance and Risk Management –IRM) தொழில்நுட்பத் தேர்வு மற்றும் சர்வதேச வரிவிதிப்பு மதிப்பீடு தேர்வு (International Taxation – Assessment Test - INTT-AT) ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள், செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தாமதக் கட்டணம் ரூ.600 செலுத்தி, விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வழக்கமாக 28 நாட்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த முறை 17 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டதாலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 3 முறை தேர்வு
முன்னதாக ஜனவரி, மே / ஜூன் மாதங்களில் என ஆண்டுக்கு 2 முறை சிஏ தேர்வு நடைபெற்று வந்தது. தற்போது கூடுதலாக ஒரு முறை தேர்வு நடக்க உள்ளது. முதல்நிலை, இடைநிலைத் தேர்வுகள் 3 முறை நடைபெற உள்ளன. குறிப்பாக தேர்வு ஜனவரி, மே/ ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது.
இதனால் தேர்வு மையங்களை இறுதி செய்வது, விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது ஆகியவற்றுக்காக நேரம் தேவைப்படுவதால், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது.
இனி வரக் கூடிய சிஏ தேர்வுகளுக்கும் இனி ஆன்லைனில் விண்ணப்பிக்க 17 நாட்கள் அவகாசம் மட்டுமே வழங்கப்படும் என்றும் இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கழகம் தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.icai.org/