தேர்ந்தெடுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள் 1000 பேருக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். (IITM) திட்டத்தின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்களை வழங்கினார். இந்தத் திட்டத்தின்மூலம் 1 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் மின்னணு அறிவியலுடன் இணைக்கப்படுவர். 


அனைவருக்கும்‌ ஐஐடிஎம் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வில்  தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்‌. சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள டி.டி.ஜெகன்னாதன்‌ அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.


என்ன சிறப்பம்சங்கள்?


நம்‌ நாட்டின்‌ தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில்‌ முதன்மை நிறுவனமான சென்னை ஐஐடியை, கிராமப்புற மாணவர்கள்‌ உட்பட அனைத்து மாணவர்களுக்கும்‌ கொண்டு சேர்க்கும்‌ முயற்சியாக உருவாக்கப்பட்ட திட்டம் அனைவருக்கும்‌ ஐஐடிஎம். 


சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளைச்‌ சேர்ந்த 500 அறிவியல்‌ ஆசிரியர்களுக்குப்‌ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்கள்‌ வாயிலாக 1 லட்சம்‌ மாணவர்களுக்குக் கற்பித்தல் கடத்தப்படும். இதற்குப் பயன்‌ தரும்‌ வகையில்‌ மின்னணு செய்முறைப் பெட்டகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனை சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின் வழங்கினார்.


நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:


''எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில், அனைத்து மாணவர்களுக்கும் சமத்துவமான கல்வியை வழங்குவதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஐஐடி சென்னையில் பிஎஸ் தரவு அறிவியல் படிக்க, தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில் 45 பேர் அரசு, மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.


திறனறிவுத் திட்டம் மூலம் மாதாமாதம் 1000 ரூபாய்


10ஆம் வகுப்புப் படிக்கும் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என 1000 மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறிவுத் திட்டத்தின்கீழ் உதவித் தொகை வழங்கப்படும்.


குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு வழிகாட்டுதல் வழங்கப்படும். அவர்கள் 12ஆம் வகுப்பை நிறைவு செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கப்படும். 


கல்லூரி படிக்கும்போதும் உதவித் தொகை


அவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரிப் படிப்பைத் தொடரும்போதும் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. 


தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வசதிகள் கிடைக்கப்பட வேண்டும். கல்வி சமமாகக் கிடைத்தால்தான், அவர்களுக்கு அனைத்துமே சமமாகக் கிடைக்கும். இந்தத் திட்டத்தை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.''


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 


இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.