தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கில், ஐ.பி. முகவரியை அடிப்படையாகக் கொண்டு, 5 மாநிலங்களுக்கு தனிப்படைகள் விரைந்துள்ளன.


கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பிரபல தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனால், அந்தப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பகுதிகளும் பரபரப்பு ஏற்பட்டது.


கோபாலபுரம், ஜெ.ஜெ.நகர், ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. சாந்தோம், பெரம்பூர், பூந்தமல்லி, சாந்தோம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் அத்தனை பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி


தொடர்ந்து காவல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனைகளை நடத்தினர். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.


எனினும் பள்ளி நிர்வாகத்தினர் குறுஞ்செய்தி அனுப்பியதை அடுத்து, பெற்றோர்கள் வந்து தங்களின் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். இதற்கிடையே யாரும் பயப்பட வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்தது.


இதற்கிடையே பொது மக்கள் யாரும் அச்சப்பட வேண்டும் என்று காவல்துறை தெரிவித்தது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி காவல்துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’’சென்னை மாநாகராட்சி எல்லைக்குள் செயல்படும் சில கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடங்கிய இ- மெயில்கள் வந்துள்ளன. மெயிலில் குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு மோப்ப நாய்கள் அடங்கிய குழுவினர் விரைந்துள்ளனர். இ- மெயில்களை அனுப்பிய குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


அதனால் பொது மக்கள் யாரும் அச்சம்கொள்ள வேண்டாம்’’ என்று சென்னை மாநகராட்சி காவல்துறை தெரிவித்தது.


5 தனிப்படைகள் அமைப்பு


தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. இதுதொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. சென்னை சைபர் கிரைம் காவல்துறை சார்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.


ஐ.பி. முகவரியின்படி, சுவிட்சர்லாந்தில் உள்ள நிறுவனத்தில் இருந்து மெயில் அனுப்பப்பட்டது தெரியவந்தது. முதலில் ஐ.பி. முகவரியைத் தர மறுத்த சுவிஸ் நிறுவனர் பின்னர் தமிழக காவல்துறைக்கு அளித்தது.


இந்த நிலையில், கிடைத்துள்ள ஐ.பி. முகவரியை அடிப்படையாகக் கொண்டு, 5 மாநிலங்களுக்கு தனிப் படைகள் விரைந்துள்ளன. குறிப்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, ஜார்க்கண்ட் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களுக்கு தனிப் படைகள் விரைந்துள்ளன.