2022- 23ஆம் கல்வி ஆண்டு முதல் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைந்த பி.எஸ்சி. படிப்பு தொடங்கத் திட்டமிட்டுள்ளது என்று சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இதுகுறித்துச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கெளரி கூறியதாவது:


’’டைம்ஸ் உயர் கல்வி நிறுவனங்களின் உலகளாவிய தர வரிசைப் பட்டியலில் மெல்போர்ன் பல்கலைக்கழகம் 33ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் மற்றும் செய்முறைப் படிப்புகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட உள்ளன. 


இதன்படி ஒருங்கிணைந்த பி.எஸ்சி. படிப்பில் முதல் 2 ஆண்டுகளில், அதாவது 4 செமஸ்டர்களில், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் மற்றும் செய்முறைப் படிப்புகள் அடங்கிய பாடங்கள் இருக்கும். கடைசி 2 செமஸ்டர்களில், 3 முக்கியப் பாடங்களில் ஏதேனும் ஒன்று முழுமையாகக் கொடுக்கப்பட்டிருக்கும். 


சென்னைப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய உயர் கல்வித் துறைகளின் தலைவர்களின் கவனமான ஆய்வுக்குப் பிறகு, இந்தப் படிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழுவும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம்  ஒருங்கிணைந்த பி.எஸ்சி. படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதப் படிப்புகள் தொடங்கப்படும். 


அதேபோல உயிரியல் படிப்பில், அடிப்படை அறிவியல் பயன்பாடுகள் உருவாக்கப்படும். இதன்மூலம் தற்கால சூழலுக்கு ஏற்ப, மாணவர்கள் உயிரியல் படிப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளப்படும். 


உலகத் தரத்தில் இந்தப் படிப்புகள் அமையும். இதன் தரம் கீழ்க்கண்ட வகையில் உறுதி செய்யப்படும். இதற்கான பட்டம், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படும்’’. 


இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கெளரி தெரிவித்துள்ளார்.




ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி 


ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலைப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகம் 2010-ம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம் என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.


அந்த வகையில் கடந்த 2021- 22ஆம் கல்வி ஆண்டில், 340 ஏழை மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்து, இலவசமாக இளங்கலைப் படிப்புகளைப் படித்து வருகின்றனர். 


இதற்கிடையில், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் 131 இணைப்புக் கல்லூரிகளிலும், 3-ம் பாலினத்தவருக்கு இலவச சேர்க்கை வழங்கப்படும் என்று துணைவேந்தர் கெளரி அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.