பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது, மே தினத்தில் பெருமை சேர்ப்பதாகத் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து இன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


’’தமிழ்நாடு அரசின்‌ குரூப்‌ 1 தேர்வில்‌ மூன்றாம்‌ முறையாகக்‌ கலந்து கொண்ட பீடித்‌ தொழிலாளி மகள்‌ ஸ்ரீமதி, விடாமுயற்சியால்‌ வெற்றி பெற்று, இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்.


தமிழ்நாடு அரசின்‌ பல்வேறு துறைகளில்‌ காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப்‌ 1 தேர்வுகள்‌ அறிவிப்பு கடந்த 2022ஆம்‌ ஆண்டு ஜூலை மாதத்தில்‌ வெளியிடப்பட்டது. அதனைத்‌ தொடர்ந்து, விண்ணப்பித்தவர்களுக்கான முதல்நிலைத்‌ தேர்வு கடந்த 2022ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ 19ஆம்‌ தேதி நடை பெற்றது. அதன்‌ முடிவுகள்‌ கடந்த 2023 ஏப்ரல்‌ மாதம்‌வெளியானது.


இதைத்‌ தொடர்ந்து, குரூப்‌ 1 முதன்மை தேர்வுகள்‌ கடந்த ஆகஸ்ட்‌ மாதம்‌ நடத்தப்பட்டன .அதில்‌, 1,333 ஆண்கள்‌, 780 பெண்கள்‌ என மொத்தம்‌ 2,113 பேர்‌ கலந்து கொண்டு தேர்வை எழுதினர்‌. இதில்‌ 90 பேர்‌ தேர்ச்சி பெற்றுள்ளனர்‌.


இந்த குரூப்‌ 1 தேர்வில்‌ தேர்ச்சி பெற்றவர்களில்‌ ஒருவர்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌‌ கனவு திட்டமான, நான்‌ முதல்வன்‌ திட்டத்தில்‌ பயிற்சி பெற்றுத்‌ தேர்ச்சி பெற்றவர்‌ என்ற செய்தி வெளியாகி நான்‌முதல்வன்‌ திட்டத்தின்‌ வெற்றியைப்‌ பறைசாற்றியது.


ஏழ்மை நிலையில் வெற்றி


இம்முறை குரூப்‌ 1 தேர்வில்‌ வெற்றி பெற்றவர்களில்‌ பலர்‌ மிகவும்‌ ஏழ்மையான நிலையில்‌ தனது சொந்த முயற்சியில்‌ வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெற்றுள்ளனர்‌ எனும்‌ செய்திகள்‌ வந்தவண்ணம்‌ உள்ளன. திருப்பூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில் பணிபுரிகின்ற மூன்று பெண்‌ ஊழியர்கள்‌ ஒரே நேரத்தில்‌ குரூப்‌ 1 தேர்வில்‌ தேர்ச்சி பெற்று அந்தப்‌ பகுதியில்‌ பெரும்‌ பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளனர்‌.


அதேபோல, தென்காசியைச்‌ சேர்ந்த பீடி சுற்றும்‌ தொழிலாளி ஒருவரின்‌ மகள்‌ ஸ்ரீமதி என்பவரும்‌ இந்த குருப்‌ 1 தேர்வில்‌ வெற்றி பெற்றுள்ளார்‌ என்பது குறிப்பிடத்தக்கது இவர்‌ ஏழ்மையான ஒரு பீடி தொழிலாளியின்‌ மகள்‌. இவர்‌ பொருளாதார வசதி இல்லாததால்‌, வீட்டிலிருந்தே படித்துள்ளார்‌. இவர்‌ ஏற்கனவே இரண்டு முறை குரூப்‌ 1 தேர்வு எழுதியும்‌ தேர்ச்சி பெறவில்லை. எனினும்‌, ஸ்ரீமதி விடாமுயற்சியுடன்‌ 3வது முறையாக குரூப்‌ 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்‌.


26.4.2024 முதல்‌ தொடங்கிய‌ நேர்காணலில்‌ பங்குபெறவிருக்கும்‌ இவர்‌ தமிழ்நாடு அரசு அலுவலகங்களில்‌ காலியாகயுள்ள துணை ஆட்சியர்‌, காவல்‌ துணை கண்காணிப்பாளர்‌, வணிக வரித்துறை உதவி ஆணையர்‌ ஆகிய பதவிகளில்‌ எதேனும்‌ ஒன்றில்‌ தேர்வு செய்து அதிகாரியாகப்‌ பொறுப்பேற்கும்‌ வாய்ப்பு கிடைத்துள்ளது.


ஏழ்மை ஒரு தடையில்லை


படிப்புக்கு ஏழ்மை ஒரு தடையில்லை, முயன்றால்‌ படித்து முன்னேறலாம்‌. வெற்றி முகட்டைத்‌ தொடலாம்‌ என்பதை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துவதாக ஸ்ரீமதி அவர்களின்‌ வாழ்க்கையும்‌, அவரது விடாமுயற்சியும்‌ வழிகாட்டுகின்றன.


மே முதல்‌ நாள்‌ தொழிலாளர்‌ திருநாள்‌. பீடி சுற்றும்‌ ஒரு தொழிலாளியின்‌ மகள்‌ ஸ்ரீமதி விடாமுயற்சியுடன்‌ படித்து, வென்று உயர்‌ அதிகாரியாகப் பொறுப்பேற்க இருக்கும்‌ செய்தி அனைவருக்கும்‌ முன்னுதாரனமாக அமைந்துள்ளது. மே தின வாழ்த்துகளை ஸ்ரீமதிக்கும்‌ அவருடைய பெற்றோருக்கும்‌ அனைவரும்‌ கூறி, பாராட்டுகிறார்கள்‌’’.


இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.