விபத்தொன்றில் சிக்கி படுத்த படுக்கையாக, 10 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருந்த மாணவி சிந்துவை அண்மையில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசிய நிலையில், சிந்துவின் மதிப்பெண்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.


சிந்து என்ற மாணவி சென்னை திநகரில் உள்ள வித்யோதயா பெண்கள் பள்ளியில் பயின்று வந்தார். இவருடைய தந்தை சக்தி ஒரு டீ கடை நடத்தி வருகிறார். சிந்து ஒரு சிறப்பான கைப்பந்து வீராங்கனையாக இருந்து வந்துள்ளார். 


இந்தச் சூழலில் கடந்த 2020ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக அவர் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். அந்த விபத்து அவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. அவருடைய பற்கள் அனைத்தும் விழுந்துள்ளன. அத்துடன் அவருக்கு கால், முகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் காயம் ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக சுமார் 10 அறுவை சிகிச்சைகள் வரை அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. 


இந்த விபத்திற்குப் பிறகு அவர், நாள் முழுவதும் கட்டிலில் படுத்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மாணவி சிந்துவின் நிலையை அறிந்த முதல்வர் ஸ்டாலின், அவரின் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும் என்று அறிவித்தார். அவருக்கு அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல சிந்துவை நேரில் சந்தித்தும் வாழ்த்தினார்.




இதற்கிடையே இந்தாண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் உதவியாளர் ஒருவரைக் கொண்டு, சிந்து தன்னுடைய தேர்வை எழுதினார். 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 20) வெளியான நிலையில், மாணவி சிந்து பெற்ற மதிப்பெண்கள் குறித்து விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி சிந்து 86 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.


சிந்து மொழிப் பாடத்தில் 80 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 95 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். வணிகவியல் பாடத்தில் 92 மதிப்பெண்களும் கணக்கியல் பாடத்தில் 89 மதிப்பெண்களும் மாணவி சிந்துவுக்குக் கிடைத்துள்ளன. கணிதப் பயன்பாடுகள் பாடத்தில் சிந்து 66 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். செய்முறைத் தேர்வில் 96 மதிப்பெண்களை சிந்து வாங்கியுள்ளார். 


இதுகுறித்துப் பேசிய அவர், ''என்னுடைய மதிப்பெண்களைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இன்னும் அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தேன். அடுத்தகட்டமாக என்ன துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இன்னும் முடிவெடுக்கவில்லை. இதுகுறித்து சில நாட்களில் முடிவெடுப்பேன். குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகத் திட்டமிட்டு வருகிறேன்'' என்று மாணவி சிந்து தெரிவித்துள்ளார். 


சிந்து குறித்து அவருடைய தந்தை சக்தி, “என்னுடைய மகள் அதிகமான நம்பிக்கை மற்றும் தைரியம் கொண்டவள். மருத்துவர்கள் அனைவரும் அவர் பிழைப்பது கடினம் என்று சொன்னார்கள். அப்போது என் மகள் என்னிடம், ‘நீங்கள் கவலைப்படாதீர்கள் நான் விரைவில் குணம் அடைந்துவிடுவேன் ’என்று கூறினார். அதேபோல் வேகமாக உடல் நலம் தேறி வந்துள்ளார்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண