ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுகளுக்கு தடை ரத்து செய்யப்பட்டது குறித்து ஆலோசித்து மேல்முறையீடு செய்யப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை மசோதா 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு  நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.


இதற்கிடையே, இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அதிர்ஷ்டம் அடிப்படையிலான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்தது செல்லும் என்று உத்தரவிட்டது.  


மேலும் திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில் ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுகளுக்கு தடை ரத்து செய்யப்பட்டது குறித்து ஆலோசித்து மேல்முறையீடு செய்யப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (நவ. 10ஆம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ’’ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. ஆளுநர், தமிழக அரசுக்கு இதில் உரிமை இல்லை என்று கூறி இருந்தார். ஆனால் நீதிமன்றம, சட்டம் இயற்றுவதில் மாநில அரசுக்கு முழு உரிமை இருக்கிறது என்று கூறி இருக்கிறது. சட்டத்துறை வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து மேல்முறையீடு செய்ய உள்ளோம்.


என்ன செய்யப்படும்?


இணையவழி சூதாட்டம் ஒழுங்குமுறை படுத்தல் மற்றும் தடை செய்தல் சட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை படுத்தல் சட்டத்தின்படி, எப்படி குழுக்கள் அமைத்து, ஒழுங்குமுறைப் படுத்தி பரிசீலனை செய்து அமைக்கலாம் என்று ஆலோசிக்கப்படும்.பிறகு இணையவழி விளையாட்டுகளை எப்படி விளையாட அனுமதிக்கலாம் என்று பார்க்க வேண்டும். 


இரண்டாவதாக, ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஏனெனில் இந்த இரு விளையாட்டுகளால்தான், நிறையப் பேர் உயிரிழக்கிறார்கள், பணத்தை இழக்கிறார்கள். இதைத் தனியாகத்தான் அளித்திருந்தோம். ஏனெனில் ரம்மில் என்பது திறமை அடிப்படையில் ஆனது. ஆனால் கணினியில் விளையாடப்படும் ஆன்லைன் ரம்மி என்பது முழுக்க முழுக்க அதிர்ஷ்டம் அடிப்படையில் ஆனது. அதனால்தான் அத்தகைய விளையாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்’’ என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.