அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 372 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தற்போத உதவிப் பேராசிரியருக்கு இணையான தகுதியோடு பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.


நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்


எனினும் தற்காலிக ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் தங்களைத் தேர்வு செய்யாமல், புதிதாக உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்யக் கூடாது. அதற்கான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதற்கான மேல் முறையீட்டு வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் முன்பு வந்தது. 


இதில், அண்ணா பல்கலை. சார்பில் வரைவு அறிவிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படும். தற்காலிக ஆசிரியர்களுக்கு 5% சலுகை மதிப்பெண்களும் நேர்முகத் தேர்வில் கூடுதல் மதிப்பெண்களும் வழங்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது. 


பணியிடங்களை 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும்


இந்நிலையில், முதல்கட்டமாக, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 372 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட இறுதிப் பட்டியலை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜனவரி மாத இறுதிக்கு ஒத்தி வைத்துள்ளது. 


பிஎச்.டி. கட்டாயமில்லை


உயர் கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர, ஜூலை 1 முதல் பிஎச்.டி. கட்டாயமில்லை என்றும் நெட்/ ஸ்லெட் ஆகிய தகுதித் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் எனவும் யுஜிசி அண்மையில் அதிரடியாக அறிவித்தது. இந்த அறிவிப்பை யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார்  வெளியிட்டார். 


2018ஆம் ஆண்டு உயர் கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியராகச் சேர முனைவர் படிப்பு கட்டாயம் என்று யுஜிசி அறிவித்தது. ஏற்கெனவே  முனைவர் படிப்பு (பிஎச்.டி.) படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு 3 ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. 2021- 22ஆம் ஆண்டு முதல், உயர் கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர பிஎச்.டி. கட்டாயம் என்று அறிவிப்பு வெளியானது. 


எனினும் கொரோனா பெருந்தொற்று, அதைத் தொடர்ந்த ஊரடங்கு ஆகியவற்றால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவர்களால், பிஎச்.டி. படிப்பை முடிக்க முடியவில்லை என்பதால், சில ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது இதை ஏற்று, பல்கலைக்கழக மானியக் குழுவும் விலக்கை அளித்தது குறிப்பிடத்தக்கது.