கோடை, செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி ஜூன் 19-ம் தேதி அனைத்து அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 


இதுகுறித்து அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதேபோல அரசு உதவிபெறும், தனியார் சுயநிதிக் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 


நாடு முழுவதும் வெயில் காலம் தொடங்கி, மக்களை சுட்டெரித்து வருகிறது.இந்த நிலையில் பள்ளிகள் முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி, மாணவர்களுக்கு விடுமுறையை அறிவித்து வருகின்றன. கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. 


வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்


கடும் வெப்பம் காரணமாக, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, முதியவர்கள் மற்றும் சிறார்கள் வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் வெளியே செல்லும்போது தலையை மறைக்க வேண்டும் அல்லது குடை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


உடலில் பிடிப்புகள் ஏதேனும் இருந்தாலோ, சுவாசிப்பதில் சிரமம் இருந்தாலோ மருத்துவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தெருக்களில் விற்கப்படும் மற்றும் மூடாமல் வைக்கப்படும் பழங்களை சாப்பிட வேண்டாம் என்று மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.