அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


நடைபெற்று வரும் கலந்தாய்வு


தமிழ்நாட்டில் கடந்த மே 8ஆம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணியைத் தொடங்க மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. 
தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின்கீழ் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் மொத்தம் 1,07,299 இடங்கள் உள்ளன.


முன்னதாக விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்க (மே 19) கடைசித் தேதியாக இருந்தது. இந்த நிலையில் விண்ணப்பிக்கக் கால அவகாசம் மே 22 வரை நீட்டிக்கப்பட்டது. 


 2.46 லட்சம் பேர் விண்ணப்பம்


கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பதிவு முடிந்ததும், மாணவர்களின் தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


மாணவர் சேர்க்கைக்கு தமிழ் வழிப் பட்டப்படிப்புகளுக்கு, தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசைப் பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இந்த ஆண்டு 2.46 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.


மே 29 அன்று தொடங்கிய கலந்தாய்வு


இந்த நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர சிறப்புப் பிரிவினருக்கு மே 29  அன்று கலந்தாய்வு தொடங்கியது.  விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் ஆகிய பிரிவினருக்குக் கலந்தாய்வு 31ஆம் தேதி வரை நேரடி முறையில் நடைபெற்றது. அந்தந்தக் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் கலந்தாய்வு தொடங்கியது.


இந்தக் கலந்தாய்வு ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 40,287 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து மீதமிருந்த இடங்களை நிரப்புவதற்கான 2-ம் கட்டக் கலந்தாய்வு ஜூன் 12-ம் தேதி தொடங்கியது. இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நேற்றுடன் (ஜூன் 20) நடந்து முடிந்தது. இரண்டு கட்டக் கலந்தாய்வுகளுக்குப் பிறகு,  75,811  இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.


இதைத் தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சியில் முறையில், மீண்டும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்தக் கலந்தாய்வு ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதை அடுத்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.