உதவிப் பேராசிரியர்கள் நியமன விவகாரத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித் தேர்வு நடத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் கூறியதாவது:
''தமிழக அரசுக் கல்லூரிகளுக்கு 4000 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில், அதில் 50 சதவீதத்தைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் அல்லது சிறப்பு போட்டித் தேர்வு நடத்தி தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்!
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5,303 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பலர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் உழைப்பும், சேவையும் மதிக்கப்பட வேண்டும்!
உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்திற்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று உயர் கல்வித் துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதனால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு போதிய அளவில் பயன் கிடைக்காது என்று கூறப்படுகிறது!
உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் தகுதி மற்றும் திறமையில் எந்த சமரசமும் செய்து கொள்ளத் தேவையில்லை. கவுரவ விரிவுரையாளர்களில் யு.ஜி.சி. நிர்ணயித்த கல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் சிறப்பு போட்டித் தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய அரசு முன்வர வேண்டும்.''
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக 2012- 13 முதல் 2016- 17 வரை ஏராளமான காலியிடங்கள் தோன்றின.
நிலைமையை சமாளிப்பதற்காக 4,084 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக உயர் கல்வித்துறை வெளியிட உள்ளது.
முன்னதாக ஜூலை மாதம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எழுத்துத் தேர்வை அறிமுகம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான தேர்வின்போது எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு மற்றும் பணி அனுபவத்திற்கு மதிப்பெண்கள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.