டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் இன்று முதல் ஜூலை 27-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இனிவரும் காலத்தில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் தரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளதாவது:
’’தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் (TNTET Paper I and Paper II) 2022ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது.
விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் 26.04.2022 வரை வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 க்கு 230,878 பேரும் மற்றும் தாள் 2-க்கு 401886 பேரும் என மொத்தமாக 6,32764 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் இவ்வலுவலகத்திற்கு பெறப்பட்டு வருகிறது.
ஆகையால் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையினை ஏற்று, ஆசிரியர் தசூதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-க்கு (TNTET Paper I and Paper II) க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு, சில தொழில்நுட்பக் காரணங்களால் திருத்தம் மேற்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 (TNTET Paper I and Paper II)-க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 24.07.2022 முதல் 27.07.2022 வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள அளிக்கும் விண்ணப்பங்கள் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்று அறிவிக்கப்படுகிறது.
மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளும்பொழுது கீழ்க்காணும் வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.
1. விண்ணப்பதாரர்கள் விவரங்களைப் புதுப்பித்தவுடன் முன்பக்கத்திலுள்ள சமர்ப்பி (Submit) பொத்தானை அழுத்தி செய்யப்பட்ட மாற்றங்களை உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
2. சமர்ப்பி (Submit) பொத்தானை அழுத்தி, உறுதி செய்யவில்லை எனில் முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
3. விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து பணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே மாற்றங்களைச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
4, விண்ணப்பதாரர்கள் மாற்றங்களைச் செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின் அதில் மேலும் மாற்றங்களைச் செய்யக் கூடாது. எனவே, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன் மீளவும் சரிபார்த்துக் கொள்ளவும்.
5. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும்.
6. விண்ணப்பதாரர்கள் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் கல்வித்தகுதி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது.
7. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுகளான தாள் 1, தாள் 11 ஆகியவற்றில் எந்தமாற்றமும் செய்ய இயலாது. மேலும் இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்விதக் கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட மாட்டாது’’.
இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.