பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் காக்கிநாடா மாணவி நேஹாஞ்சனி 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று, வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநில பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (ஏப். 23) வெளியாகி உள்ளன. இந்தத் தேர்வில் 81.14 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 6,14,459 மாணவர்கள் தேர்வு எழுதியதாகவும், அதில் 4,98,585 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
தேர்ச்சி வீதம் எவ்வளவு?
மாணவிகள் 84.09 சதவீதமும், மாணவர்கள் 78.31 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முடிவுகளில், பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் 93.90 தேர்ச்சி சதவீதத்துடன் முதலிடத்திலும், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்தது.
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்
காக்கிநாடா சிறுமி, ஆந்திரப் பிரதேச பள்ளி வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். இதுவரை யாருமே முழு மதிப்பெண்களைப் பெற்றதில்லை. தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழித் தேர்வுகளில் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இதுவரை யாருமே மொழிப் பாடங்களில் சதம் அடித்ததில்லை.
யார் இந்த நேஹாஞ்சனி?
காக்கிநாடாவின் பாஷ்யம் பள்ளியில் படிக்கும் மாணவி நேஹாஞ்சனி. அவருக்கு பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து, எண்டா அனிதா என்ற மாணவி 599 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் எலமஞ்சிலியில் உள்ள சைதன்யா பள்ளியில் படித்ததாகக் கூறப்படுகிறது. பல்நாடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர் 598 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஒப்பிசர்லா ZP மேல்நிலைப் பள்ளி மாணவி பவானி சந்திரிகா 598 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
துணைத் தேர்வுகள் எப்போது?
10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் மே 19 முதல் 28 வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.