டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த சோதனை

டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கடந்த மாதம் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை நடத்தியது. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தினோம் என அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாக புகார்கள் வந்துள்ளதாக கூறப்பட்டது.

டாஸ்மாக், தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கு

இந்த நிலையில், அமலாக்கத்துறையின் சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

Continues below advertisement

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், கே. ராஜசேகர் ஆகியோர் விசாரித்தனர். வழக்கின் விசாரணையின்போது, அமலாக்கத்துறை வெளிப்படையாக இருப்பதுபோல் ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் மறைந்துகொள்கிறது, எதற்காக சோதனை செய்கிறோம் என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்றம், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவது உள்ளிட்டவை குறித்து அமலாக்கத்துறை தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று(23.04.25) தீர்ப்பளித்த நீதிபதிகள், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது சட்டவிரோதம் அல்ல, அந்த சோதனை தேச நலனுக்கானது எனக் கூறி, டாஸ்மாக் மற்றும் தமிழ்நாடு அரசின் மனுக்களை தள்ளுபடி செய்தனர். மேலும், சோதனை அடிப்படையில் விசாரணையை தொடரவும் அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.