சனாதன எதிர்ப்பு கருத்தரங்கில் கலந்துகொள்வது குறித்து மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2 சுற்றறிக்கைகளும் திரும்பப் பெறப்படுவதாக திருவாரூர் அரசுக் கல்லூரி முதல்வர் சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருவாரூர் அருகே காட்டூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி, சனாதனத்துக்கு எதிரான கருத்தரங்கு நடைபெற உள்ளது. காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் இந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்தக் கருத்தரங்கில் திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்ற தொனியில், அக்கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ராஜாராமன்  செப்.12-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். 


அந்த சுற்றறிக்கையில், ‘‘சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துகளை, அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி கலைஞர் கோட்டத்தில் நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்துகொண்டு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்தத் தகவல் பரவி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து திருவிக கல்லூரி முதல்வரைக் கண்டித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் செப்.15-ம் தேதி திருவாரூர் அரசுக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருவாரூர் மாவட்ட பாஜக அறிவித்தது.




இதைத் தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 13ஆம் தேதி) மற்றொரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், 'மாணவர்கள் சனாதனம் பற்றிய தங்களின் கருத்துகளை, தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தெரிவிக்கலாம்' எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில், சனாதன எதிர்ப்பு கருத்தரங்கில் கலந்துகொள்வது குறித்து மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2 சுற்றறிக்கைகளும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுகிறது என்று திருவாரூர் அரசுக் கல்லூரி முதல்வர் சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


சனாதன எதிர்ப்பு - பின்னணி என்ன?


சென்னையில் அண்மையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, ‘கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவைப்போல், சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்’ என பேசி இருந்தார். அவரது இந்த பேச்சுக்கு தேசிய அளவில் பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்தது. பாஜகவை சேர்ந்த தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக இன்னும் குரல் கொடுத்து வருகின்றனர். 


என்ன பேசினார் உதயநிதி?


’’இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. `சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் `சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.


கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம் ஆகும். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்.


சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் வேறு ஒன்றும் கிடையாது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது’’ என்று உதயநிதி பேசியது நாடு முழுவதும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.