குழந்தைத் திருமணம் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழியை அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள் எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகளில் மாணவிகள் இன்று உறுதிமொழி எடுத்தனர்.
தமிழ்நாட்டைக் குழந்தைத் திருமணம் இல்லாத மாநிலமாக மாற்ற 38 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடு அறிவியல், மருத்துவம், தொழிலுநுட்பம் என எத்தனையோ துறைகளில் முன்னேறி வந்தாலும், இன்னொரு பக்கம் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் அவலங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இதற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன.
வறுமை, குறைவான வருமானம், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என உணர்வது, விழிப்புணர்வு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குழந்தை திருமணத்துக்கு முக்கியமாகக் கூறப்படுகின்றன.
கொரோனா காலத்தில் அதிகரித்த குழந்தைத் திருமணங்கள்
இந்த நிலையில் கொரோனா காலத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் குழந்தைகளின் திருமணங்கள் கணிசமாக அதிகரித்தன. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவியர் 37 பேருக்கும், 10-ம் வகுப்பு மாணவியர் 45 பேருக்கும், 11-ம் வகுப்பு மாணவியர் 417 பேருக்கும், 12-ம் வகுப்பு மாணவியர் 2 பேருக்கும் என்று 511 பேருக்கு திருமணம் நடைபெற்றது.
மேலும் பதிமூன்று வயதைக் கடந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் 10 பேருக்கும் குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டிருந்தது பள்ளிக் கல்வித்துறையின் ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்க மாணவிகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டு, புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிகளில் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டைக் குழந்தைத் திருமணம் இல்லாத மாநிலமாக மாற்ற 38 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார்.
இன்று உறுதிமொழி
இதுகுறித்து அனைத்து மாவட்டக் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில் குழந்தைத் திருமணம் இல்லா தமிழ்நாடு என்ற பெயரில் இன்று (16 அக்டோபர் 2023) உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள், ’’எனது பகுதியிலோ அல்லது சமூகத்திலோ “குழந்தைத் திருமணம்” நடைபெறுவதாக தெரியவந்தால் எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் எனவும் எனது சுற்றுப்புறத்திலும் சமூகத்திலும் எந்தவொரு குழந்தைக்கும் திருமணம் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வேன் எனவும் மேலும், எங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர்; குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனவும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும்; தடையற்ற கல்விக்காகவும் தொடர்ந்து செயல்படுவேன் எனவும் உளமார உறுதி அளிக்கிறேன்’’ என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.