தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு  மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


மானியத்துடன் பில்டர் காபி நிலையம் ( Coffee Shopp Loan ) 


பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: ”தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


திட்ட அறிக்கை தயார் செய்ய  இலவச ஆலோசனைகள்


மேற்படி இத்தொழிலை  தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) ரூ.2.00 இலட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு  5%  வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும் மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு  அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய  திட்ட அறிக்கை தயார் செய்ய  இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்”  என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி ?


18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


மானியம் எவ்வளவு தரப்படும் ? 


இத்தொழிலுக்கு ரூ.6.50 இலட்சம் முதல் ரூ.7.50 இலட்சம் வரை திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு  30% அல்லது அதிகபட்சம்  ரூ.2.25 இலட்சம் எனவும்  பழங்குடியினருக்கு  50% அல்லது அதிகபட்சமாக  ரூ.3.75 இலட்சம் வரை  வழங்கப்படும். பயனாளி 5% முதல் 10% சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் செங்கல்பட்டு அவர்கள் தெரிவித்துள்ளார்.