அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.


நடந்தது இதுதான்!


கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக, பல்கலைக்கழகத்தை அரசே எடுத்துக்கொண்டது. தொடர்ந்து அங்கு பணியாற்றும் பேராசிரியர்களின் தகுதிகள் பரிசோதிக்கப்பட்டு வந்தன. இதில் மேலாண்மைத் துறை மற்றும் வேளாண்மைத் துறையில் பணியாற்றும் 56 பேராசிரியர்கள் அரசு தகுதி விதிமுறைகளின்படி பணியில் சேராமல், பணியாற்றி வந்தனர்.


இவர்கள் மீது ஆட்சி மன்றக் குழு மற்றும் உயர் கல்வித்துறையின் அறிவுரை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலை பதிவாளர் டாக்டர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார். அரசு விதிகளின்படி அவர்களின் நியமனம் மேற்கொள்ளப்படாததால், தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, துணை வேந்தர் தெரிவித்துள்ளார். 


56 பேருக்கு பணிநீக்க உத்தரவு


இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் பணியாற்றி வரும் 18 பேருக்கு பணிநீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பணி நிரவலில் சென்று வெளிக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேருக்கு கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் மூலம் உத்தரவு வழங்கப்பட உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். 


யுஜிசி விதிமுறை மீறல்


இதுகுறித்து அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’யுஜிசி விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர்கள் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது பி.எச்.டி படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆனால் அவை எதுவுமே இல்லாமல், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவர்கள் எல்லாம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதைக் கருத்தில்கொண்டு, தகுதிக் குறைவானவர்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. இதுகுறித்து 2019ஆம் ஆண்டில் சிண்டிகேட் குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


இப்போது அதன்மீது துணை வேந்தர் உரிய நடவடிக்கையை எடுத்துள்ளார். இதற்கு யாரும் பொறுப்பல்ல. 10 ஆண்டுகளாக அவர்கள் தகுதியை மீறி சலுகையை அனுபவித்து உள்ளார்கள். அதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


யார் மீது நடவடிக்கை?


வணிக மேலாண்மைத் துறையில் 52 பேர் உதவிப் பேராசிரியர்கள். அதேபோல 2 பேர் திட்டப் பிரிவு உதவிப் பேராசிரியர்கள், ஒருவர் பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியர், மீதி ஒருவர் வேளாண்மை பொருளாதார த் துறை உதவிப் பேராசிரியர். இவர்கள் 56 பேர் மீது அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.


நீதிமன்றத்துக்கு அவர்கள் சென்ற நிலையில், நீதிமன்றமே தகுதி குறைவானவர்களை நியமிப்பது தவறு என்று தெரிவித்து விட்டது. அவர்கள் வருங்காலத்தில் தங்களின் தகுதிக்கேற்ற வகையிலான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்தால், அவற்றை அரசு பரிசீலிக்கும். 


அதேபோல உபரியாக இருந்த 92 பேர் பல்வேறு அரசுக் கல்லூரிகளில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்ப, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்’’ என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.