11ஆம் நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Continues below advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளிலும் 10 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றிய தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் கூண்டோடு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 2ஆம் தேதி முதல் அவர்கள் காலவரையறை இல்லாத தொடர் போராட்டத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் தலைவர்கள் கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் 16 கல்லூரி வளாகங்களில் இந்த போராட்டம் நடந்து வரும் நிலையில், இதுகுறித்து ஏபிபி நாடு தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஆசிரியர்கள் போராட்டத்துக்கு அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Continues below advertisement

இதற்கிடையே நீளும் போராட்டம் குறித்து உதவிப் பேராசிரியர் அகில் கூறும்போது, ''எல்லோரும் கடும் வெயிலில், போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சிலருக்கு உயர் ரத்த அழுத்தம், சிலருக்கு குறைந்த ரத்த அழுத்தம், நீரிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து வெயிலில் இருப்பதால் சிலரின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

உடல்நலம் கடும் பாதிப்பு

ஆண்கள் மற்றும் பெண் பேராசிரியர்கள் என அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆம்புலன்ஸ் எங்கள் வளாகத்திற்கு வந்து, அனைவருக்கும் உடல்நிலை பரிசோதனை மேற்கொண்டது. குறிப்பாக பலரின் உடல்நலம் மற்றும் இதயநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொளுத்தும் வெயிலில், ஆண் - பெண் பேதமில்லாமல் அனைத்து உதவிப் பேராசிரியர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசு எங்களின் பணியை நிரந்தரம் செய்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

மேலும் தீவிரமாகும் போராட்டம்

இல்லையெனில் எங்களின் போராட்டம் மேலும் தீவிரம் அடையும். எல்லா பல்கலைக்கழகங்களிலும் காலவரையறை இல்லாத போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படும்'' என்று உதவிப் பேராசிரியர் அகில் தெரிவித்தார்.

மேலும் சில பேராசிரியர்கள் நம்மிடம் கூறும்போது, ’’வேலைக்கு எடுக்கும்போது தேர்வுகள், நேர்காணல் என்று முறையாக நியமித்த அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், இப்போது வாய் மொழியாக வெளியே போகச் சொல்லிவிட்டது. எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவும் கொடுக்கவில்லை.

நான் சொல்கிறேன், நீ கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற தொனியில் செய்கிறார்கள். எதற்குமே எந்த உத்தரவும் கிடையாது. ஏஐசிடிஇ உத்தரவுப்படி இத்தனை பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

உலகத் தர அண்ணா பல்கலைக்கழகம் இப்படிச் செய்யலாமா? 

உலகத் தரத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் இப்படிச் செய்யலாமா? இது எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குமுறுகின்றனர்.

அரசின் செவிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக தற்காலிக உதவிப் பேராசிரியர்களின் அழுகுரல் எட்டுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.