அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கை கசிய காரணமாக இருந்தவர்கள், மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


அதேபோல சென்னை மாநகர காவல் ஆணையர் குறித்துத் தெரிவித்த கருத்துகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  


கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை


சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அடுத்த நாள் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 


அண்ணா பல்கலை வளாகத்தில் இருந்த சிசிடிவி அடிப்படையில் போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். வழக்கின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், அது இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டன.


முதல் தகவல அறிக்கையில், ’’நண்பருடன் தனியாக அந்த மாணவி இருந்ததை ஞானசேகரன் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அதை மாணவியிடம் காண்பித்து, ’’என்னுடைய இச்சைக்கு இணங்காவிட்டால், இதை கல்லூரி டீன், பேராசிரியர்களிடம் காண்பித்து கல்லூரியை விட்டே வெளியேற்ற வைப்பேன்’’ என்று மிரட்டியுள்ளார்.


போதாததற்கு ’’மாணவியின் தந்தை எண்ணை செல்போனில் இருந்து எடுத்து, தந்தைக்கே அந்த வீடியோவை அனுப்பி வைப்பேன்’’ என்றும் ’’சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவேன்’’ என்றும் மிரட்டி உள்ளார்.


மாணவியும் மாணவரும் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல், மாணவரை விரட்டிவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்’’ என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது.


உயர் நீதிமன்றம் சொன்னது என்ன?


ஏற்கெனவே இதுதொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் மனுத் தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், 25 லட்சம் ரூபாயை வழங்க உத்தரவிட்டு இருந்தனர். 


அதேபோல, உரிய அனுமதி பெறாமல் செய்தியாளர் சந்திப்பு நடத்திய காவல் ஆணையர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தனர். இந்த நிலையில் ஆணையர் குறித்து உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.