ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவதை அடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் குறும்படப் போட்டியை அறிவித்துள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து எல்லா கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜி20 உச்சிமாநாடு:


17வது ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த ஆண்டு நவம்பர் 14-ல் தொடங்கி நவம்பர் 16-ஆம் தேதி வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது, ஜி20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பேற்கும் இந்தியாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பிரதமர் மோடியிடம், தலைமைப் பொறுப்பை இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ வழங்கினார்.


ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் இடம்பெற்றுள்ளன. பொதுவாக ஜி-20 தலைவர் பதவி என்பது எந்த நாட்டில் ஜி20 மாநாடு நடைபெறுகிறதோ அந்த நாட்டுக்கு ஜி20 தலைமைபதவி தற்காலிகமாக அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு ஜி 20 தலைமைப் பதவி கிடைத்துள்ளது. 


ஓர் ஆண்டு தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, உலகளாவிய பிரச்சினைகளான பருவநிலை மாறுபாடு, தீவிரவாதப் பிரச்சினை, கடன்பிரச்சினை, கொரோனா தாக்கம்,  உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண முயலும். ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் (One Earth; One Family; One Future) என்ற பெயரில் இந்தியா ஜி20 மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிறது. 




இந்த நிலையில் இந்தியா முழுவதும் 56 இடங்களில் உள்ள 75 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களை G20 University Connect என்ற பெயரில் ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


குறும்பட போட்டி:


இதன் ஒரு பகுதியாக இளம் மனங்களை ஈர்ப்போம் (Engaging Youth Minds) என்ற பெயரில், கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. இத்துடன் குறும்படப் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதிகபட்சம் 5 நிமிடங்களுக்கு மாணவர்கள் தங்களின் குறும்படத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஜி20 நாடுகளை இந்தியா எப்படி வழிநடத்த முடியும்? ( How India can lead the G20 countries) என்ற தலைப்பில் குறும்படங்கள் அமைய வேண்டும். கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம். 


* உடல் நலம்
* கல்வி
* மின் ஆற்றல்
*  சுற்றுச்சூழல்
*  காலநிலை மாற்றம்
* பெண்களுக்கு அதிகாரமளித்தல்
*  ஊழல் எதிர்ப்பு
* வேலைவாய்ப்பு
* நிதி
* வாழ்க்கை (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை)
* விவசாயம்


விண்ணப்பிக்க கடைசி தேதி:


குறும்படம் இந்தியாவின் G20 தலைமை பதவியின் கருப்பொருள்களில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். அனைத்து குழு உறுப்பினர்களின் விவரங்களும் வீடியோவில் குறிப்பிடப்பட வேண்டும்


பங்கு பெறும் மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. அதேபோல போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு விருதுகள் வழங்கப்படும். குறும்படத்தைச் சமர்ப்பிக்க பிப்ரவரி 28ஆம் தேதி கடைசித் தேதி ஆகும்.