விருதுநகர் பகுதியை சேர்ந்தவர் குருசேவ். இவர் செங்கல்பட்டு பகுதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் குருசேவ் கடந்த நான்காம் தேதி சொந்த ஊர் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை, கட்டண வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தியுள்ளார்.
திருடப்பட்ட இருசக்கர வாகனம்
இதனைத் தொடர்ந்து தனது பணிகள் முடிந்த ஒன்பதாம் தேதி செங்கல்பட்டு திரும்பியுள்ளார். தொடர்ந்து தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல வந்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதே கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருசக்கர வாகனம் கிடைக்காததால், பத்தாம் தேதி இது குறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு வாகனம் தொலைந்து விட்டதற்காக புகார் அளித்தார் .
இளம் பெண்ணுடன் பயணம்
இந்தநிலையில் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று செங்கல்பட்டு நகர் பகுதியில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தனது இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர், ஒரு இளம் பெண்ணுடன் பயணிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதை வீடியோ எடுத்துக் கொண்டே அவரை ஓரம் நிறுத்தி வாகனம் குறித்து விசாரித்தவுடன், தான் சிக்கிக்கொண்டதை உணர்ந்த இளைஞர் வாகனத்தை வேகமாக திருப்பி அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றார்.
பொதுமக்கள் அதிர்ச்சி
இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ ஆதாரத்தை காவல் நிலையத்திற்கு ஒப்படைத்து வாகனத்தை மீட்டு தருமாறு குருசேவ், காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார். செங்கல்பட்டு நகர் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனத்தை திருடிவிற்கும் நபர்கள் மத்தியில், திருடப்பட்ட பகுதியிலேயே இருசக்கர வாகனத்தில் இளைஞர் தோழியுடன், உலா வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் செங்கல்பட்டு நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு நகர் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடரும் திருட்டு சம்பவங்கள்
செங்கல்பட்டு நகர் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. செங்கல்பட்டு ரயில் நிலையம் பகுதி மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் இரு சக்கர வாகனங்கள் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. திருட்டு சம்பவங்கள் நடைபெறும் எனத் தெரிந்த இடங்களிலும் காவல்துறையினர் உரிய கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில்லை என்பதே குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.