அண்ணா பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 2020 நவம்பர், டிசம்பர் 2021 ஏப்ரல், மே மாத செமஸ்டர் இளநிலை, முதுநிலை தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை இந்த இணைப்புகளில் தெரிந்துகொள்ளலாம் எனப் பல்கலைக்கழக தேர்வுகள் கட்டுப்பாட்டகம் அறிவித்துள்ளது.
https://auexams2.annauniv.edu/result/index.php
https://auexams3.annauniv.edu/result/index.php
இதற்கிடையே தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் இணையதளம் முடங்கியுள்ளதால் சிறிது நேரம் காத்திருக்கும்படி கட்டுப்பாட்டகம் கூறியுள்ளது. மேலும் முடிவுகளைப் பொறுத்தவரையில் அனைவருமே தேர்ச்சி பெற்றிருப்பதால் யாரும் பதட்டமடைய வேண்டாம் எனவும் தேர்வுகள் கட்டுப்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டிருக்கவேண்டிய செமஸ்டர் தேர்வுகளை, கொரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் தள்ளிவைத்தது. இதைத் தொடர்ந்து, செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆன்லைன் தேர்வுகளாக நடத்தப்பட்டன. அதில், 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதினர்.
இந்நிலையில்,தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. இதில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு தேர்வு எழுதிய பாடத்துக்கு அருகே Pass, Fail குறிப்பிடாமல் ‘நிறுத்திவைப்பு’ என்பதை குறிக்கும்விதமாக WH (With held) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. அதனைக் கருத்தில் கொண்டு, நவம்பர்-டிசம்பர் மாதத்துக்கான செமஸ்டர் தேர்வு மறுதேர்வாக நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்தது.
மே 17-ம் தேதி முதல் தொடங்கிய மறுதேர்வில், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேர்வு எழுதிய சில மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத விரும்பினால் அவர்களும் இந்த மறுதேர்க்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் இன்றைக்குள் வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவத்திருந்தார்.மேலும், விருதுநகர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், தருமபுரி, புதுக்கோட்டை, திருக்கோவிலூர், வேலூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.