அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கல்லூரி வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், திமுக அமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன், சில மணி நேரத்திலேயே கைது செய்யப்பட்டார். எனினும் அவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஞானசேகரன் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால், இந்த குற்றத்தை தடுத்திருக்கலாம் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
மாணவி விவரங்களுடன் வெளியான முதல் தகவல் அறிக்கை
இதில் அடுத்த திருப்பமாக, சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை, மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் வெளியானது. இதற்கு அனைவருமே கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது:
பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல் துறையைத் தொடர்புகொள்ள உதவும் 'காவல் உதவி’ செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
அவசர காலங்களில் என்ன செய்ய வேண்டும்?
அவசர காலங்களில் 'சிவப்பு நிற அவசரம்' என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும்.
எங்கு பதிவிறக்கம் செய்யலாம்?
மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த செயலியை Google Play Store, App Store-ல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்’’.
இவ்வாறு அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
பெண்களும் மாணவிகளும் https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi&hl=ta என்ற இணைப்பை க்ளிக் செய்து, காவல் உதவி செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.