அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கத் தேவையான ஆசிரியர்களை  திமுக அரசு  உடனடியாக நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘’சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் முதலாமாண்டு பொறியியல் படிப்பில் தமிழரும் தொழில்நுட்பமும் என்ற பாடத்தைக் கற்பிப்பதற்கு உதவிப் பேராசிரியர்கள் ஒருவர் கூட இல்லை. ஆசிரியர்களே இல்லாத நிலையில், இன்று தொடங்கியுள்ள அகமதிப்பெண் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தை படிக்காமலேயே தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர்களைக் கூட நியமிக்காமல் உயர் கல்வியை திமுக அரசு சீரழித்து வருவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில்  பொறியியல் கல்லூரிகளில் தமிழை அறிமுகம் செய்வதாகக் கூறிய திமுக அரசு, முதலாமாண்டு மாணவர்கள் தமிழ் படிப்பதை  2021-22ஆம் ஆண்டில் கட்டாயமாக்கியது.  பொறியியல் படிப்பில்  தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்கிய திமுக அரசு, அதற்காக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட நியமிக்கவில்லை.

அதற்கு எதிர்ப்பு  எழுந்ததைத்  தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பாடங்களை நடத்துவதற்காக  328 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் ஒப்பந்தக் காலம் முடிவடைந்து விட்டதாகக் கூறி கடந்த டிசம்பர் மாதம் அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனால், கடந்த இரு மாதங்களாக பொறியியல் மாணவர்களுக்கு தமிழ்ப் பாடம் நடத்தப்படவில்லை.

Continues below advertisement

துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை 1965-ஆம் ஆண்டில் தமிழக மாணவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராகவும், அன்னைத் தமிழ் மொழியை பாதுகாப்பதற்காகவும் நடத்திய  மொழிப்போரால் ஏற்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு எதிரான உணர்வைப் பயன்படுத்தி த்ன்  1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால்,  இன்று வரை அன்னைத் தமிழை பாதுகாக்கவும், வளர்க்கவும் திமுக துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. பொறியியல் படிப்பில்  தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்கி விட்டு, அப்பாடத்தை நடத்த தற்காலிக ஆசிரியர்களைக் கூட திமுக அரசு நியமிக்கவில்லை என்றால், அன்னைத் தமிழுக்கு  திமுக எந்த அளவுக்கு துரோகம் செய்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இதுதான் திமுக தமிழ் வளர்க்கும் லட்சணமா? அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கத் தேவையான ஆசிரியர்களை  திமுக அரசு  உடனடியாக நியமிக்க வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.