அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று டிஎஃப்சி மையங்களில் தொடங்கியுள்ளது.


முன்னதாக பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க / அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் ஜூலை 19 ஆக இருந்தது. எனினும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகத் தாமதமாகின. இதனால், விண்ணப்பிக்கக் கடைசித் தேதி கால அவகாசம் இல்லாமல் நீட்டிக்கப்பட்டது. 


இதற்கிடையே ஜூலை 22ஆம் தேதி சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் இருந்து 5 நாட்களுக்கு, அதாவது ஜூலை 27 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜூலை 27 வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர்.


அதாவது 27ஆம் தேதி வரை 2,11,115 மாணவர்கள் விண்ணப்பித்தனர். 1,67,387 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தினர். அதேபோல சான்றிதழ்களை 1,56,214 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். 


சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறை


இதற்கிடையே சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானதால், பொறியியல் கலந்தாய்வுத் தேதிகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று டிஎஃப்சி மையங்களில் தொடங்கியுள்ளது. இதற்காக மாணவர்கள் யாரும் டிஎஃப்சி மையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. சரிபார்ப்பு நிலை குறித்து தங்களுக்கு உள்ள லாகின் ஐடியில் சென்று சரிபார்க்கலாம். 


முதற்கட்டமாக விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் 2,442 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் பதிவுசெய்துள்ள மாணவர்கள் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரடியாகச் செல்ல வேண்டும். அப்போது அனைத்து அசல் விளையாட்டுச் சான்றிதழ்களையும் அண்ணா பல்கலை. குறிப்பிடும் தேதியில் எடுத்துச்செல்ல வேண்டும். மாணவர்கள் கூடுதல் விவரங்களுக்கு tneaonline.org என்ற இணையத்தை க்ளிக் செய்து பார்க்கலாம். 


சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த உடன் ரேண்டம் எண்ணும் தரவரிசை பட்டியலும் வெளியாக உள்ளது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு உதவ 51 இலவச மையங்கள் இருந்த நிலையில், தற்போது 110 இலவச மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண